சென்னை கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ். கிருஷ்ணனின் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957 ஆகஸ்ட் 30 அன்று தனது 49-வது வயதில் காலமானார்.

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957 ஆகஸ்ட் 30 அன்று தனது 49-வது வயதில் காலமானார்.

author-image
WebDesk
New Update
Stalin NSk

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினரின் கோரிக்கையினை ஏற்று சென்னை, ஜி.என்.செட்டி தெருவில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் திருவுருவச்சிலை சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என்று முதல்வர். ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 29.11.1908 அன்று சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ். கிருஷ்ணன் என்பதாகும். கலையுலக மாமேதை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரையுலகத்தின் புகழ்பெற்ற நடிகர் ஆவார். நடிகர், பாடகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முக ஆற்றலைப் பெற்றவர்.
அறிவியல் கருத்துகள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.

ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துகளைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துகளை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கியவர். காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று மிகக் கொண்டவர். தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957 ஆகஸ்ட் 30 அன்று தனது 49-வது வயதில் காலமானார்.

அன்னாருக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் 14.1.1969-ம் ஆண்டு சென்னை ஜி.என்.செட்டி தெரு, திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு அச்சாலை சந்திப்பில் உயர்மட்டப் பாலம் கட்டியபோது அவரது சிலை சந்திப்பின் ஒரு பகுதியில் தற்காலிகமாக நிறுவப்பட்டது. தற்போது, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் குடும்பத்தார், அவரது திருவுருவச்சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Advertisment
Advertisements

முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் அக்கோரிக்கையினை ஏற்று, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் திருவுருவச்சிலை தற்போது இருக்கும் இடத்திலிருந்து பாதுகாப்பாக அகற்றி சென்னை, வாலாஜா சாலையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் விரைவில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார். 

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: