/indian-express-tamil/media/media_files/2025/02/08/wSmO1aV08jxKDjO5a2ot.jpg)
கடந்த காலங்களில் வடசென்னை எந்த அளவிற்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி நாம் இன்றைக்கு வடசென்னையை வளர்ச்சி சென்னையாக, எப்படி இன்றைக்கு மத்திய சென்னை, தென்சென்னை வளர்ந்து வந்திருக்கிறதோ, அதேபோல், இந்த வடசென்னைப் பகுதியையும் மாற்றிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இன்றைக்கு மத்திய சென்னை, தென்சென்னை எப்படி வளர்ந்து வந்திருக்கிறதோ, அதேபோல், கடந்த காலங்களில் வடசென்னை எந்த அளவிற்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி நாம் இன்றைக்கு வடசென்னையை வளர்ச்சி சென்னையாக, மாற்றிட வேண்டும், அதைவிட பெரிதாக உருவாக்கிட வேண்டும் என்பதற்காகதான் நம்முடைய அரசு இன்றைக்கு சிறப்பாக பல்வேறுத் திட்டங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
வடசென்னை வளர்ச்சித் திட்டம் முதலில் சட்டமன்றத்தில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உருவாக்கப்பட இருக்கிறது என்று நான் அறிவித்தேன். இப்போது 1,000 கோடி அல்ல, 6,400 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகளையெல்லாம் நாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். அதேபோல், 5,059 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 மாவட்டங்களில் நகர்புற வாழ்விட மேலாண்மை வாரியத்தின் சார்பில், 44,609 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு வடசென்னைப் பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்க வேண்டும். குடிசை மாற்று வாரியம் இன்றைக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற பெயரிலே வீடுகளை கட்டித்தருவது மட்டுமல்ல, பழுதடைந்த வீடுகளையெல்லாம் சீர்படுத்தி இன்றைக்கு அவர்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் பெரும்பாண்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றோம். இந்த ஆட்சி சிறப்பாக செயல்படவேண்டும். மக்கள் எந்த எதிர்பார்ப்போடு இந்த ஆட்சியை உருவாக்கி தந்திருக்கிறார்களோ, தேர்தல் நேரத்தில் அறிவித்த அறிவிப்புகளை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றுவோம்.
இந்த ஆட்சி என்பது வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல. வாக்களிக்க தவறியவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு நாம் வாக்களிக்காமல் போய்விட்டோம் என்று வருந்தவேண்டும் என்ற நிலையில் என்னுடைய ஆட்சி இருக்கும் என்று நான் சொன்னேன். அது இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். புதுமைப் பெண் என்கின்ற திட்டம் தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படவில்லை.
பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடிய மாணவிகள் வசதி இல்லாத காரணத்தினால் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்கின்றபோது மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று அறிவித்து இன்றைக்கு அது வழங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், இன்றைக்கு இந்த மாணவிகளெல்லாம் என்னைப் பார்த்து அப்பா, அப்பா என்று அழைக்கிறார்கள்.
மாணவிகளுக்கு மட்டும்தானா, எங்களைப்போன்ற மாணவர்களுக்கு இல்லையா? என்று மாணவர்கள் கேட்டார்கள். உங்களுக்கும் உண்டு என்று சொல்லி தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதேபோல் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் நீதிக் கட்சி ஆட்சியிலிருந்தபோது தியாகராயர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம். அந்த திட்டத்தை தான் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் காலத்தில் அதை பரவலாக்கி எல்லோருக்கும் சேருகின்ற வகையில் அதை நிறைவேற்றி காட்டினார்.
அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் சத்துணவாக வழங்க வேண்டும் என்று சொல்லி சத்துணவு திட்டம் என்ற பெயரில் எம்.ஜி.ஆர் அதை தொடர்ந்து நிறைவேற்றினார். அதற்கு பிறகு கலைஞர் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அது உண்மையான சத்துணவு என்று சொல்லி 5 நாட்கள் முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டத்தை நிறைவேற்றித் தந்தார். அதற்குப் பிறகு, தற்போது திராவிட மாடல் ஆட்சியில் அதையும் தாண்டி நம்முடைய வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றபோது நாம் உணவை கொடுக்காமல் அனுப்பிவைக்கிறோமே என்ற ஏக்கத்தில் இருந்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய வகையில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன் அவர்களுக்கு காலை உணவுத் திட்டம் என்ற பெயரிலே காலை உணவினை வழங்கிக்கொண்டிருக்கின்றோம் என்று பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.