அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தமிழக வளர்ச்சியை கபளீகரம் செய்ய பார்க்கின்றன: தி.க மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டின் உரிமைகளை, தமிழர்களின் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி சிந்தனை உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்கிறோம் என்றால், சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் வேர் விட்டதுதான் அதற்கு காரணம்.

தமிழ்நாட்டின் உரிமைகளை, தமிழர்களின் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி சிந்தனை உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்கிறோம் என்றால், சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் வேர் விட்டதுதான் அதற்கு காரணம்.

author-image
WebDesk
New Update
MDKj Sty

ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற காலனி என்ற சொல்லை அகற்றியிருக்கிறோம். அதிமுகவும், பாஜகவும் தமிழக வளர்ச்சியை கபளீகரம் செய்ய பார்க்கின்றன என திக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசுகையில்,  சுயமரியாதை இயக்கத்தினுடைய தொடர்ச்சி திராவிடர் கழகம் என்றால், திராவிட கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம். இன்று தமிழ்நாட்டின் உரிமைகளை, தமிழர்களின் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி சிந்தனை உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்கிறோம் என்றால், சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் வேர் விட்டதுதான் அதற்கு காரணம்.

மாநிலம் முழுவதுமிருந்து குடும்பம் குடும்பமாக வந்திருக்கக்கூடிய இந்த கருப்பு சட்டைக்காரர்கள் தான் தமிழ்நாட்டின் காவலுக்கு கெட்டிக்காரர்கள். பகுத்தறிவு சிந்தனையும் சுயமரியாதை உணர்வு கொண்ட ஒரு கருப்பு சட்டைக்காரர் ஒரு ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர். ஒரு காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு பரப்புரை மேற்கொண்டு வீதிகளில் வந்தபோது சிலர் செருப்பு வீசினாங்க, கல் வீசினாங்க, ஏன் கத்தி கூட வீசினாங்க. ஆனால், இன்றைக்கு பெரியாரின் சிந்தனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் போற்றப்படுது.

அந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பெரியாரின் படத்தை திறந்து வைத்து நான் பூரிப்படைந்தேன். இது பெரியாருடைய சிந்தனைக்கும் திராவிட கழகத்தின் கொள்கைக்கும் கிடைத்த மதிப்பு, மரியாதை. பெரியார் உலகமயமாகணும் உலகம் பெரியார்மயம் ஆகணும்னு நாள்தோறும் உழைக்கக்கூடிய மானமிகு ஆசிரியர் உழைப்புக்கு கிடைத்த பலன். திமுக எம்.எல்.ஏ, எம்.பிக்களின் சம்பளம் ஒன்றரைக் கோடி. திருச்சியில் பெரியார் உலகம் மிக சிறப்பாக உருவாக வேண்டும் என்று நம் ஆசிரியர் அவர்கள் எப்படி எல்லாம் கவனத்தோடு உழைக்கிறார் என்று எனக்குத் தெரியும்.

Advertisment
Advertisements

தகைசால் தமிழர் விருதுடன் அளித்த நிதியை பெரியார் உலகத்துக்கு வழங்கினார். பெரியார் உலகத்திற்கு திராவிட முன்னேற்ற கழகம் பங்களிக்காமல் இருக்க முடியுமா? எனவே, என்னோட ஒரு மாத சம்பளத்தை பெரியார் உலகத்திற்காக கொடுக்கலாம் என முடிவெடுத்தேன். இது பற்றி கழகத்தினுடைய பொதுச் செயலாளர் துரைமுருகனிடம், பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவிடம் சொன்னேன். உடனே அவங்க "நம்ம இன்னைக்கு வளர்ந்து, ஆளாகி மரியாதையோடு இருக்கிறதே ஐயா பெரியாராலதான்.

நீங்கள் அறிவியுங்கள், திமுகவின் 126 எம்எல்ஏக்கள், மக்களவை மாநிலங்களவையில் இருக்கக் கூடிய இருக்கக்கூடிய 31 எம்பிக்கள் ஆகியோருடைய ஒரு மாத சம்பளத்தை சேர்த்து கொடுப்போம்" என்று சொன்னாங்க. எங்க எல்லோருடைய ஒருமாத சம்பளம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய். இதைக் கொடுப்பதில் பெருமையடைகிறோம். இந்த இனம் சுயமரியாதை உணர்வை பெற்று, பகுத்தறிவு சிந்தனையை பெற்று முன்னேறி வந்து விடாதா என்று உயிர் பிரியும் காலம் வரை மூத்திர சட்டியோடு போராடிய தந்தை பெரியாரின் உழைப்பை நாம் தொடர்ந்து முன்னெடுக்கணும். சாதி பெயர்களில் 'ன்' விகுதியை மாற்ற பிரதமரிடம் கோரிக்கை; தனது சிந்தனைகள் தனது வாழ்நாளிலேயே செயல்வடிவம் பெறுவதைப் பார்க்கும் பேரு தந்தை பெரியாருக்கு தான், கிடைச்சது.

அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமண சட்டத்தை இயற்றினார், தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்ட அங்கீகாரம் வழங்கினார். பெண்களுக்கான முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஏராளமானவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இந்த மாநாட்டில் ஆசிரியர் வடித்துள்ள தீர்மானங்களை சட்டமாக, நெறிமுறையாக மாற்றும் வேலையை திமுக பார்த்துக்கொள்ளும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆணைகள் வழங்கி இருக்கிறோம், சாதி வேறுபாடு மட்டுமல்ல பால் பேதத்தை உடைத்து பெண்களையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம். தந்தை பெரியார் பிறந்த நாளையும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளையும் தமிழ்நாட்டின் முக்கிய நாளாக கருதி உறுதிமொழி எடுக்கிறோம்.

ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற காலனி என்ற சொல்லை அகற்றியிருக்கிறோம். சாதி பெயரிலிருந்த விடுதிகளை சமூக நீதி விடுதியாக மாற்றியிருக்கிறோம். மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களைச் சந்தித்து, சாதிப் பெயர்களில் 'ன்' என்று முடியக்கூடியதை மாற்றி 'ர்' என அமைத்து மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க செய்ய கோரிக்கை வைத்திருக்கிறோம். மனிதர்களுக்கு இடையே இருக்கக்கூடிய வேற்றுமையையும் பகைமையையும் விரட்ட சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, பொதுவுடைமை, கல்வி உரிமை, அதிகார உரிமை ஆகியவை வேண்டும். அப்படிப்பட்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்கத்தான் திராவிட மாடல் அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

சிலர் இவர்கள் பவள விழா கொண்டாடுகிறார்கள், நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள் ஆனால் இங்கு எதுவும் மாறவில்லையே என கேட்கிறார்கள். அவர்களுடைய கேள்வியில் இருப்பது அக்கறை இல்ல, ஆணவம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உங்களால் உடைக்க முடியவில்லை என்று சவால் விடுகிறார்கள். நம்முடைய தொண்டர்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது, இந்த நூறு ஆண்டுகளில் நாம் மாற்றத்திற்கான விதைகளை மட்டுமே விதைத்திருக்கிறோம்.

தந்தை பெரியாருடன் இந்த இயக்கம் முடிந்துவிடும் என்றார்கள், பேரறிஞர் அண்ணா எழுந்தார்! அடுத்ததாக தலைவர் கலைஞர் வந்தார். கலைஞருக்குப் பிறகு இந்த இயக்கம் அவ்வளவுதான் என்றார்கள் மக்களின் ஆதரவோடு நான் வந்தேன். என்னை பற்றி என்னென்னவோ பொய்களை எல்லாம் பரப்பிப் பார்த்தார்கள், இப்போதும் பரப்புகிறார்கள் நான் எப்போதும் போல என்னுடைய செயல்களால் மட்டுமே பதில் அளித்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 

சிலர் திமுக பிடிக்காது என்கிறார்கள். திமுகவே பிடிக்காது என்றால் அதற்குப் பொருள் ஒடுக்கப்பட்ட வீட்டுக் குழந்தைகள் படிப்பது பிடிக்காது, இந்த இடத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கிற குழந்தைகள் ஐபிஎஸ், ஐஏஎஸ்களாக வருவது பிடிக்காது, இட ஒதுக்கீடு பிடிக்காது, சமூக நீதி பிடிக்காது, சமத்துவம் பிடிக்காது, சரிசமமாக உட்காருவது பிடிக்காது, எல்லோரும் கோவிலுக்குள் நுழைவது பிடிக்காது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பிடிக்காது, ஒற்றுமையாக இருப்பது பிடிக்காது, தமிழ் பிடிக்காது, தமிழர்கள் பிடிக்காது, நாம் தலை நிமிர்ந்து நடக்கிறது பிடிக்காது.

இந்த நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமா நம்ம மக்களுக்கு கிடைத்த அனைத்தையும் பறிக்க நினைக்கிறார்கள். சுயமரியாதை இயக்கம் தேடித்தந்த உயர்வை பறிக்கிற சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அறிவியலைப் பின்னுக்குத் தள்ளி பிற்போக்குத்தனத்தையும் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலை நிறுத்துவதற்காக சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்திய நாட்டையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னாடி இழுத்துச் செல்ல தீவிரமாக முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் தடுத்து நிறுத்துகிறதுதான் திராவிட மாடல். அதனால்தான் அண்ணாவும் கலைஞரும் சொல்லாததை இந்த ஸ்டாலின் ஏன் செய்கிறான் என டென்ஷன் ஆகிறார்கள். அவர்களுக்கு எரியட்டும் என்றுதான் நான் திரும்ப திரும்ப திராவிட மாடல் என சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அடுத்தது திராவிட மாடல் 2.0 என சொல்லப்போகிறோம். வரக்கூடிய தேர்தல் அரசியல் தேர்தல் அல்ல. தமிழினம் தன்னை காத்துக் கொள்வதற்கான சமுதாயத் தேர்தல். கொள்கையற்ற அதிமுகவால் பத்தாண்டுகள் பாழாய் போன தமிழ்நாட்டை மக்களின் துணையுடன் மீட்டெடுத்து நான்கு ஆண்டுகளில் பலப்படுத்தி இருக்கிறோம்.

வரலாறு காணாத அளவு வளர்ச்சி பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதை திராவிடத்துக்கு எதிரான பாஜகவும், திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாத பழனிசாமியின் அதிமுகவும் மீண்டும் கபளீகரம் பண்ண பார்க்கிறார்கள். இவர்களை மண்ணோடு பிடிங்கி எறிய வேண்டும். அதற்கான கொள்கைத்திடமும், போராட்ட குணமும், செயல் திட்டமும், ஒற்றுமை உணர்வும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் இருக்கிறது" என பேசினார்.

க.சண்முகவடிவேல்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: