பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உளறி இருக்கிறார். அதை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது என விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகரில் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 7.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.7.12 கோடி மதிப்பீட்டில், 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று (நவம்பர் 10) திறந்து வைத்தார்.
பின்னர் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், உரையாற்றிய ஸ்டாலின், ”விருதுநகர் பெயரை சொன்னதும் காமராஜர் நினைவுக்கு வருவார். காமராஜர் பெயர் சொன்னால் பல நினைவுகள் வரும். எனது திருமணத்திற்கு காமராஜர் வருகை தர அவரது இல்லம் தேடி சென்று கலைஞர் அழைப்பு விடுத்தார். உடல் நலிவுற்றிருந்த நிலையிலும் திருமணத்திற்கு வந்து என்னையும், என் மனைவியையும் வாழ்த்தினார். காமராஜர் மறைந்தபோது, மகன்போல் இறுதி நிகழ்ச்சி நடத்தியவர் கலைஞர். அரசு மரியாதையுடன் உடல் அடக்கம், காமராஜருக்கு சென்னையில் சாலை, நெல்லையில் சிலை, காமராஜரின் செயலாளர் வைரவனுக்கு பணி, வீடு ஒதுக்கப்பட்டது. காமராஜர் சகோதரி நாகம்மாளுக்கு கலைஞர் நிதியுதவி வழங்கினார். காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து போற்றினார்.
விருதுநகர் மாவட்டத்தில் 1286 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. சமூக நலத்திட்டங்கள் மூலம் 95 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவிகள் உயர் கல்விக்கு விருதுநகர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சராசரி 33 சதவீதம், தமிழ்நாட்டில் இது 60 சதவீதம். விருதுநகரிலோ 95 சதவீதம். இது புதுமைப்பெண், தமிழ்புதல்வன், கல்லூரி கனவு திட்டங்களால் சாத்தியமாகி உள்ளது.
கன்னிசேரிபுதூரில் பட்டாசு ஆலை ஆய்வுக்கு சென்றேன். பட்டாசு தொழிலாளர்கள் சில கோரிக்கைகள் வைத்தனர். இதன்படி, பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி வரையிலான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். இதற்காக, கலெக்டரின் கீழ் தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும்.
அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடி செலவில் சிப்காட் தொழில் வளாகம்; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விருதுநகரில் ரூ.24.50 கோடி செலவில் சாலை, மழை நீர் வசதிகள் மேம்படுத்தப்படும். ரூ.15 கோடியில் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பில் வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை அமைக்கப்படும்.
அருப்புக்கோட்டை மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும். காரியாபட்டியில் ரூ.21 கோடியில் புதிய அணை கட்டப்படும். விவசாயிகளின் நலன் கருதி கண்மாய்கள், ரூ.35.1 கோடியில் மேம்படுத்தப்படும். கவுசிகா ஆறு, உள்ளிட்ட நீர் நிலைகள் ரூ.41 கோடியில் சீரமைக்கப்படும். காலிங்கப்பேரி உட்பட 4 அணைகள் ரூ.23 கோடியில் மேம்படுத்தப்பட்டு, ரூ.2.74 கோடி மதிப்பில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
வீட்டு விளக்காக இருப்பேன். நாட்டிற்கு தொண்டனாக இருப்பேன். மக்கள் கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன். சில நாட்களுக்கு முன், இந்தியாவின் புகழ்பெற்ற இந்தியா டுடே பத்திரிகையில் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெருமையும், புகழையும் வழங்கியது தமிழக மக்கள் தான். நமக்கு பின்னாடி, நம்மளை முந்தி வெற்றி பெற வேண்டும் என பல பேர் வந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் வேகமாக ஓட வேண்டும் என நான் நினைக்கிறேன்.
மாவட்டம் தோறும் கள ஆய்வுகளை நடத்தி கொண்டு இருக்கிறேன். இது குறித்து எதுவும் புரியாத, ஆட்சி பொறுப்பில் இருந்த போது, மக்களை நினைத்து கவலைப்படாத, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சொல்கிறார், மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கருணாநிதி பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி இருப்பதாக உளறி இருக்கிறார். அதை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஒருத்தர் பொய் சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக் கூடாது என வேடிக்கையாக சொல்வார்கள். அதனை இனிமேல் கொஞ்சம் மாற்றி, பொய் சொல்லலாம். ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது என இப்போம் சொல்லலாம். அந்த அளவுக்கு, பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.
மக்கள் நலனுக்காக நாம் செய்து வரும் மூலதன செலவுகள் என்னென்ன? எளிய மக்களுக்கு செய்த திட்டங்கள் என்னென்ன? என்பது குறித்து இதே மேடையில் மணி கணக்கில் என்னால் சொல்ல முடியும். நான் கேட்கிறேன். நீங்கள் எதனை மக்களுக்கு பயன்படும் திட்டங்கள் என்று சொல்கிறீர்கள்.
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு மைதானம் உள்ளிட்ட பல திட்டங்களை வேண்டாம் என்று சொல்கிறீர்களா? இப்படி வாய் துடுக்காகவும், ஆணவத்துடனும் பேசி பேசி தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கொண்டு இருக்கிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்திற்காகவே தமிழக மக்கள் இனிமேல் உங்களை தோற்கடித்து கொண்டுதான் இருப்பார்கள். அது உறுதி.
நான் கேட்கிறேன் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழகத்தை காக்க ஓய்வின்றி உழைத்தார். கருணாநிதி பெயரை மக்கள் திட்டங்களுக்கு வைக்காமல் யாருடைய பெயரை வைக்கிறது. பதவி சுகத்திற்காக, கரப்பான் பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து போனீர்களே, உங்க பெயரை வைக்க முடியுமா?
கருணாநிதி என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். கருணாநிதி தான் தமிழகத்தினை காக்க கூடிய காவல் அரண். அவரது கொள்கைகள், சிந்தனைகளை செயல்படுத்தி வருகிறேன். என்னை பொறுத்த வரையில் என்றும், எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக, வாழ்கைக்கும் வளர்ச்சிக்கும் சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.