கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என மன்னார்குடியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரின் மகள், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதை மேற்கோளிட்டு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரின் மகள் துர்கா, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 2015ல் குடும்ப சூழல் காரணமாக திருமணம் செய்து 2 குழந்தைகளுக்குத் தாயான துர்கா, விடாமுயற்சியோடு போராடி சாதித்துக் காட்டியுள்ளார்.
நகராட்சி ஆணையராக தேர்வு செய்யப்பட்ட துர்கா பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றுக் கொண்டார். பின்னர் பேட்டி அளித்த துர்கா, "தூய்மைப் பணியாளராக எனது தந்தை சந்தித்த அனைத்து கஷ்டத்தையும் பார்த்துள்ளேன். தாத்தா, அப்பா தூய்மைப் பணியாளர்களாக இருந்தபோதும் நான் படித்து நகராட்சி ஆணையராக வந்துள்ளேன். நான் நகராட்சி ஆணையராக பணியாணை பெற்றதன் மூலம் எனது தலைமுறையே மாற்றம் அடைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் துர்காவின் வீடியோவை பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்! கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் துர்கா அவர்களே எடுத்துக்காட்டு! நான் மீண்டும் சொல்கிறேன்… கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து!” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“