ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் பாராட்டு விழா இன்று (மே 3) நடைபெற்றது.
இந்த விழா ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான கி.வீரமணி தலைமை வகித்தார். உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:; “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு மூலம் பூனைக்கு மணி கட்டியுள்ளனர். கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்தது மிகப்பெரிய வெற்றி. மாநில அரசின் சட்டத்தின் மேல், ஒரு மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டு உள்ளது. மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தால் 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டியிருந்தால் 3 மாதத்திற்குள் அனுப்ப வேண்டும். 2வது முறை வந்தால் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு வைத்தது மிகப்பெரிய வெற்றி. ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம். பிரதமரின் உரிமையை ஜனாதிபதி எடுத்துக்கொண்டால் தாங்கி கொள்வாரா? எந்த காலத்திலும் உரிமையை விட்டுத்தர மாட்டோம்.
தீர்ப்பு தந்த நம்பிக்கையோடு மாநில சுயாட்சியை மீட்டெடுக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். இந்தியாவுக்கு இன்றைக்கு நாம் முன் மாதிரியாக இருப்போம். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,விற்கு வாக்களித்த மக்கள்தான் சுயாட்சி நாயகர்கள். பாராட்டு விழா என்று யாராவது கேட்டால் நான் நேரம் அளிக்க மாட்டேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்பதால் பாராட்டு விழாவிற்கு நேரம் ஒதுக்கினேன்.
மத்திய அரசின் ஏஜெண்டாக உள்ள கவர்னர் திட்டங்களை தடுக்க முடியும் என்றால் மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை? கவர்னர் பதவி என்பது எந்த பயனும் இல்லத ரப்பர் ஸ்டாம்ப் போன்றது. நாங்கள் ஆளுநருடன் அதிகார போட்டி நடத்தவில்லை. எங்களுக்கும் அவருக்கும் பகை கிடையாது. சமீபத்தில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நன்றாக பேசி விட்டு தான் வந்தோம். அரசியலில் வேறுபாடு இருந்தாலும், மனிதர்களுடன் பண்போடு நட்புணர்வு காக்கப்பட வேண்டும். நாளை இவருக்கு பதில் வேறு கவர்னர் வந்து, இதேபோன்று செய்தால், அவரின் செயல்பாடுகளை எதிர்ப்போம். ஆனால், எங்களது உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். என்னை பொறுத்தவரை இதே கவர்னர் தொடர வேண்டும். அப்போது தான் நமது செல்வாக்கு வளரும். அவர்கள் செல்வாக்கு குறையும்.
திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு. இளைஞர்களுக்காக செயல்படுத்திய திட்டம் எல்லாம் அனைவருக்கும் தெரியும். கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும்.பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான கட்டுக்கதைகள், மூடநம்பிக்கை பரப்பும் இடமாக இருக்கக்கூடாது. அறிவியல் ரீதியான அணுகுமுறை, சமூக நீதியை கற்றுத்தரும் இடமாக கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சி நடத்துகிறதோ, இதற்கு எதிராக பேசுபவர்களை அழைத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்திற்காக பல்கலைகள் வளர்த்து எடுக்க முயற்சி செய்கிறோம். படிப்பு யாராவது பயனற்றது என சொல்பவர்களை அமைதியாக வெளியேற்றுங்கள். கல்வி தான் பறிக்க முடியாத சொத்து. மாணவர்களை படிக்க முடியாத படி தேசிய கல்விக் கொள்கை மற்றும் விஸ்வகர்மா திட்டங்களை கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் தவறான கருத்துகளை பரப்புகின்றனர்." இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.