பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் பெரிய வரவேற்பை பற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகள் குறித்து தமிழக சட்டசைபயில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் பேசியுள்ளனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் லூசிஃபர். மஞ்சுவாரியார், டவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், 5 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் 2-ம் பாகம் எம்புரான் கடந்த மார்ச் 27-ந் தேதி வெளியானது. முதல் பாகத்தை இயக்கிய பிரித்விராஜ் இயக்கிய இந்த படத்திற்கு முரளி கோபி கதை எழுதியிருந்தார்.
மோகன்லால், மஞ்சுவாரியார், டவினோ தாமஸ் ஆகியோருடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தில், கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்தும், இந்துக்களை இழிவுப்படுத்தும் விதமாக, காட்சிகளை சித்தரித்துள்ளதாகவும், வலதுசாரி அமைப்புகள் எம்புரான் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து மோகன்லால் மன்னிப்பு கோரி, ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதேபோல் முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சையாக காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் தேனி விவசாயிகள், எம்புரான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும், கோகுலம் பிலிம்ஸ் கோபாலனின், சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஆனாலும் எம்புரான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், படக்குழுவுக்கு நாளுக்கு நாள் சிக்கல்களும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே முல்லை பெரியாறு அணை குறித்து எம்புரான் திரைப்படத்தில் கட்சிகள் பற்றி தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் பேசியுள்ளனர். எம்புரான் திரைப்படம் சென்சாருக்கு போகும்போது அந்த காட்சி கட் செய்யப்படவில்லை. படம் வெளியான பிறகு இது தொடர்பான செய்திகள் வந்தபிறகு, எதிர்ப்புகள் எழுந்த பிறகும் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதேபோல் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், படத்தை நான் பார்க்கவில்லை. படத்தை பார்த்தவர்கள் சொன்னதை கேட்டு எனக்கு பயமும் கோபமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த திரைப்படம் மற்ற மாநிலத்தில் கூட, பிரச்னையை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார். எம்புரான் திரைப்படத்தில், முல்லை பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படம் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று எம்.எல்.ஏ வேல்முருகன் கூறியுள்ளார்.