இந்தி மொழியை திணிக்கலாமா? சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என்று மத்திய அரசு முயற்சி செய்கிறது. இந்தியை அல்ல எந்த மொழிகளை திணித்தாலும், தமிழ் அழிந்து போகாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்று உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து ஆகியோர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் இன்றைய தினம், சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவிடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதில், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு.. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டவர்காள் தான் தமிழ்த்தாயின் தலைப்பிள்ளைகள். மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு வீரவணக்கத்தை செலுத்துவிட்டு தான் இங்கு வந்துள்ளேன். விசிக தலைவர் திருமாவளவனின் கோரிக்கைக்கு ஏற்ப, விரைவில் இருவரின் சிலைகளும் நிறுவப்படும்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என்று தான் மத்திய அரசு இன்றும் முயற்சிக்கிறது. இந்தியை அல்ல எத்தனை மொழிகளை திணித்தாலும், தமிழ் அழியாது. இந்தி திணிப்பை முதலில் எதிர்த்தது பெரியார்; 1948ல் இந்தி திணிப்புக்கு எதிராக அண்ணா போராட்டத்தை நடத்தினார். திமுக ஆட்சி அமைந்த பின்னர் தான் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அதற்கு சிக்கலை உருவாக்க தான் மும்மொழி திட்டத்தை கொண்டு வருகிறார்கள். தற்போது கூட 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு தொழிற்நுட்பம் கொண்ட பண்பாடு தமிழ் நிலத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறோம்.
இந்த ஆய்வு முடிவுகளை கூட சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படியொரு தமிழ் சமூகம் மீது இந்தியை திணிக்க முடியவில்லை என்று பல்கலைக்கழகங்கள் மூலமாக திணிக்க முயற்சிக்கிறார்கள். மாநில அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் துணை வேந்தரை ஆளுநர் நியமிப்பாரா? உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க இடம் கொடுத்து, பேராசிரியர்களை நியமித்து, ஊதியம் கொடுக்கும் எங்களுக்கு பல்கலைக்கழக வேந்தரை நியமிக்க தெரியாதா? ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் வேந்தராக இருக்க கூடாது?
அண்மையில் யுஜிசி வரைமுறைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். இதனை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்கலைக்கழகங்களை உருவாக்குவது மாநிலங்கள் தான். எதை செய்ய வேண்டுமோ, அதனை செய்யாமல், எதை செய்யக் கூடாதோ அதனை செய்து வருகிறது மத்திய அரசு. சமூகநீதிக்காக 100 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இன்று தமிழ்நாடு இந்தியாவின் 2வது வளர்ந்த மாநிலமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால் தான், அதிகளவில் பெண்கள் தமிழ்நாட்டில் தான் பணியாற்றி வருகிறார்கள். இந்த வளர்ச்சியை தடுக்க மாநில சுயாட்சியை தடுக்கிறார்கள். மொழிப்போர் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, மொழி, இனம், நாட்டையும் காக்க வேண்டும். அதற்கு யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் டெல்லியில் நடைபெறும் என்று பேசியுள்ளார்.