2026க்கான வெற்றி விழாதான் இந்த பிறந்தநாள் விழா. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன் என தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்ச் 1-ந் தேதி தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காக இன்றில் இருந்தே தி,மு.க.வினர் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.
மேலும் வி.சி.க தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த பிறந்த நாள் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களால்தான் நான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். 2026க்கான வெற்றி விழாதான் இந்த பிறந்தநாள் விழா.
கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வருமே தவிர, விரிசல் வராது. விரிசல் வரும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கலாம். உங்கள் எண்ணத்தில் மண் விழுமே தவிற விரிசல் வராது. நம்முடைய ஒற்றுமைதான் தமிழகத்தை, சமூக நீதியை, காப்பாற்றி இருக்கிறது. மற்ற மாநில மக்கள் வியந்து பார்க்கிற வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதை, பாஜகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கல்வியை சீர்குலைக்க தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த சொல்கிறார்கள். கல்விக்கான நிதியை கூட மத்திய அரசு வழங்க மறுத்து மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது. பிரதமரே, இந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள். எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும். உங்களால் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் இதனால் பாதிக்கப்பட வேண்டும்?
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுங்கள். இது தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.