சிறுமி ஆராதனா வைத்த கோரிக்கை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் அமைக்கப்படும் என்று தென்காசியில் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
அரசு விழாவில் பங்கேற்பதற்காக தென்காசி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், 182.56 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழக்கினார். தொடர்ந்து 22.20 கோடி மதிப்பிலான 57 திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், 34.14 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,
தென்காசி மாவட்டத்திற்காக முக்கியமாக கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து அது தொடர்பாக சற்று முன்னர் அதிகாரிகளிடம் பேசினேன். அதில் முக்கியமான சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அறிவிப்பை வெளியிடுகிறேன். முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையாக அமைந்துள்ள புளியங்குடி-சங்கரன்கோவில் சாலை மேம்படுத்தப்படும். தென்காசியில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
பனையூர்-கூடலூர் சாலை மேம்படுத்தப்படும். சிவகிரி மற்றும் ஆலங்குளம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் இலத்தூர் ஏரி ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் வினைதீர்த்த நாடார்பட்டியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற சிறுமி, எங்களது பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதி உள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என் மீது குழந்தைகளும் இவ்வளவு நம்பிக்கை வைத்து கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.
சிறுமி ஆராதனா வைத்த கோரிக்கையை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில் அந்த பள்ளிக்கு முதல் கட்டமாக 2 வகுப்பறைகள் உடனடியாக கட்ட உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொருவருடைய தேவையையும், ஒவ்வொருவரின் பிரச்சினையையும் அறிந்து நமது அரசு செயல்படுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் பதில் அளிக்க விரும்பவில்லை. எங்களை நம்பி வாக்களித்தவர்களுக்கு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் உள்ளோம். தமிழக மக்கள் இருண்ட காலத்தில் இருந்து உதயசூரியன் காலத்திற்கு வந்துவிட்டனர். இந்தியாவில் தமிழகம் முதலிடம் வரவேண்டும் என்பதே எனது லட்சியம், எனது குறிக்கோள். அனைத்து துறைகளிலும் தமிழகம் உயர்ந்து வருகிறது.
அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக சென்று நான் அறிவித்த திட்டப்பணிகள் செயல்படும் விதம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். எந்த நோக்கத்திற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டது என்பதற்கான நோக்கத்தை கடைநிலை ஊழியர்கள் வரை அறிந்து செயல்பட வேண்டும். அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவோம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“