scorecardresearch

ஆளுனர் ஆர்.என் ரவி பேச்சு ஆணவத்தின் உச்சம்; சாபக்கேடு: ஸ்டாலின், வைகோ, சி.பி.எம் கடும் கண்டனம்

தமிழக மக்கள் நலனுக்காவும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுனர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றும் வகையில் ஆளுனர் செயல்படுவார் என்று நம்புகிறேன்

Stalin K Balakrishnan Vaiko
ஸ்டாலின் கே.பாலகிருஷ்ணன் வைகோ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்தும் அதற்காக போராட்டம் நடத்திய மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுனர் ஆர்.என்.ரவி பேசியது கண்டனத்துக்கு உரியது என்று முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தனது பதவிபிரமாணத்திற்கு முரணாகவும், மாநில நலனுக்கு எதிராகவும் செயல்படும் ஆளுனருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், தெரிவித்து நிர்வாக ஒழுங்கை கெடுக்கும் வகையில் ஆளுனர் செயல்படுகிறார். மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுனர் என்று சுருக்கமாக சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு தி கிரேட் டிக்டேட்டராக ஆளுனர் தன்னை நினைத்துக்கொள்ள வேண்டாம்.

இதனை உணர்ந்து தமிழக மக்கள் நலனுக்காவும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுனர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றும் வகையில் ஆளுனர் செயல்படுவார் என்று நம்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் ஆளுநர்.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலிகொடுத்திருக்கிறார்கள், நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

இது தொடர்பாக சிபிஐ மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் இன்று பேசியபோது, நாவடக்கம் இல்லாமல் வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை என்பதிலிருந்து அந்த சட்டம் நிறைவேற்றப்பட கூடாது என்பதே அர்த்தம் என தெரிவித்துள்ளார். ஆளுநரின் இக்கருத்துக்கள் அரசியல் சாசன வரம்புகளை மீறிய அடாவடித்தனமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் கூட்டு ஆலோசனை அடிப்படையில் செயல்பட வேண்டுமென அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் 60க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலையில் மாண்டு போயுள்ளனர். மேலும், பல்லாயிரம் குடும்பங்கள் சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றன. ஆன்லைன் தடை மசோதாவை தமிழக சட்டப்பேரவை இரண்டாவது முறை நிறைவேற்றிய பின்னரும் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு முழுவதும் விரோதமானதாகும்.

தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களுடைய உயிருக்கும், உடலுக்கும் பேராபத்து ஏற்பட்ட நிலையில், அந்த ஆலையை மூட வேண்டுமென அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, அம்மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்து விட்டதாகவும், இப்போராட்டத்திற்கு வெளிநாட்டு சக்திகளின் கை இருப்பதாகவும் ஆளுநர் கூறியிருப்பது அமைதியாக போராடிய மக்களை கொச்சைப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சென்னை உயர்நீதிமன்றமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை மூட உத்தரவிட்டிருந்ததை ஆளுநர் அறியாதவர் போல் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து எதிரான கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக நீடிப்பதற்கான அருகதை அற்றவர். அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

அதேபோல் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்இ.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu cm stalin vaiko and k balakrishnan condemnation report against governor

Best of Express