MP Jothimani Speech In Parliament : நாடாளுமன்றத்தில் பிறப்டுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து சிறப்பாக பேசியதாக கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனால் எம்பி ஜோதிமணி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் துடிப்பான சமூக அக்கரை கொண்ட பெண் என பெயரெடுத்த ஜோதி மணி சமூக பிரச்சணைளுக்காக குரல் கொடுத்து வருகிறார். தற்போது கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இவர், நேற்று நாடாளுமன்றத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்த மத்திய அரசின் முந்தைய செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மாநில அரசுகளின் உரிமையை உறுதி செய்யும் அரசியல் அமைப்பு திருத்த முன்மொழிவை நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில் சில வரலாற்று உண்மைகளையும் பதிவு செய்ய விரும்புகிறேன். பிஜேபியையும், நரேந்திர மோடியையும் பிற்படுத்தப்பட்டவர்களை காக்க வந்த ரட்சகர்களாக நீங்கள் பறைசாற்றுகிறீர்கள்.
மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், விளக்கமாற்றோடு வீதியில் வேலை செய்ய வேண்டியவர்கள் எல்லாம், படித்து பட்டம் பெற்று. அதிகாரத்தை அலங்கரித்துவிடுவார்கள் என்று அவதூறு செய்தது யார்? விளக்கமாற்றோடு வீதி வீதியாக ஊர்வலம் போனது யார்? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக விபி சிங் அரசை கவிழ்த்தது யார்? நீங்கள் எல்லாம் சமூக நீதி பற்றி பேசலாமா?
ஒன்றிய அரசின் அமைச்சர் அவர்கள் மசோதாவை தாக்கல் செய்யும் பொழுது, மருத்துவக் கல்வியில் உயர் கல்வி உள்பட 4000க்கும் மேற்பட்ட இடங்கள், நரேந்திர மோடியின் தயவில் ஓபிசி மாணவர்கள் பெற்றது போல ஒரு சித்தரிப்பை முன்வைத்தார். அதன் மீது உள்ள உண்மையை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தில் பெருமை மிகு சமூக நீதி வரலாற்றையும், இந்த அரசுக்கு நான் நினைவூட்ட கடமைபட்டிருக்கிறேன். இந்தியாவின் முதல் அரசியல் சாசன சட்டத்திருத்தம் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், தனது மகத்தான சாதனைகளுக்காக உங்களால் தினம் தோறும் வெறுக்கப்படும் நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு, ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை 69 சதவீத இடஒதுக்கீட்டை நாங்கள் காலம் காலமாக நிலைநிறுத்தி வருகிறோம் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
அந்த பாரம்பரியத்தை ஒட்டி. இன்று மருத்துவக்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீட்டை , தமிழக அரசு போராடி இன்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்பது தான் உண்மை. இது சமீபத்திய வரலாறு. ஆனால் இதை பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையாக வழக்கம் போல் பறை சாற்றி வருகிறீர்கள். பொய்களையும் பிஜேபியையும் பிரிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மருத்துவ படிப்பில் ஓபிசிஇடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு என்பதை மறுக்க முடியாது.
இன்று நாடாளுமன்றத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை தீர்மானிக்க மாநிலங்களுக்கு உரிமை வழங்கும் 127 வது அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா பற்றிய விவாதத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து பாஜக அரசின் இரட்டை வேடம் பற்றி எனது உரை. pic.twitter.com/CNJXdURuv3
— Jothimani (@jothims) August 10, 2021
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக, சென்னை உயர்நீதிமன்றம், மத்திய தொகுப்பிற்கு மாநில அரசுகள் ஒதுக்கும் மருத்துவக்கல்வி இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்ப வழங்கியது. அந்த தீர்ப்புக்கு பின்னராவது, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டீர்களா, இல்லை? அதற்கும் நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டியதிருந்தது. தமிழகத்தின் சமூக நீதிக்கான சமரசம் இல்லாத போராட்டத்தின் விளைவாகவே இன்று மருத்துவக்கல்வியில் ஒபிசிக்கு 27 சதவீத இடஒதுக்கீடு சாத்தியப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.
சற்று முன்பு தமிழக முதலமைச்சர் இல்லத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. அண்ணன் @mkstalin அவர்கள் நாடாளுமன்றத்தில் நேற்றைய எனது பேச்சை பாராட்டினார்கள். அவரது கடினமான பணிச்சுமைக்கும்,சிறப்பான அரசு நிர்வாகத்திற்கும் மத்தியில் இந்த பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. எனது மனமார்ந்த நன்றிகள்🙏
— Jothimani (@jothims) August 11, 2021
எம்பி ஜோதிமணியை இந்த பேச்சை கேட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியதாக எம்பி ஜோதி மணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், "சற்று முன்பு தமிழக முதலமைச்சர் இல்லத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்றத்தில் நேற்றைய எனது பேச்சை பாராட்டினார்கள். அவரது கடினமான பணிச்சுமைக்கும், சிறப்பான அரசு நிர்வாகத்திற்கும் மத்தியில் இந்த பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. எனது மனமார்ந்த நன்றிகள்" என பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.