ஆண்டு தோறும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய் மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச தாய் மொழி நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருவதாக, அண்ணா, எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் இருந்தே, பெரும் சர்ச்சையை கிளம்பி வரும் நிலையில், சமீப காலமாக மும்மொழி கொள்கை என்ற பெயரில் பள்ளி கல்வியில், இந்தி மொழியை திணிக்க, பா.ஜ.க முயற்சி செய்து வருவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு, முன்பு, மத்திய கல்வி அமைச்சர், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி அளிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த தகவல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இருமொழி கொள்கை அமலில் இருக்கும் நிலையில், மும்மொழி கொள்கை எதற்காக என்றும், இந்த மும்மொழி கொள்கை மூலம் பா.ஜ.க அரசு இந்தியை தமிழகத்தில் திணிக்க பார்க்கிறது என்ற குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தாய் மொழி தினமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!
தமிழ்_வாழ்க!
என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.