Mudhalvar Marundhagam Scheme: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை வரும் 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், சென்னையில் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெனரிக் மற்றும் பிற மருந்துகள் பொதுமக்களுக்கு எளிதில் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில், தமிழகம் முழுவதும், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்காக தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தார்.
மேலும், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன்படி முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பம் தெரிவித்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 840 பேருக்கு தமிழகத்தில், ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் நிதி வழங்கப்படும்.
அடுத்து இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சதுக்கு மருந்துகள் வழங்கப்படும். மருந்துகள் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 24-ந் தேதி, தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதில் சென்னையில் மட்டும் 33 மருந்தகங்களை திறக்கப்பட உள்ளது. இந்த மருந்தகங்கள் மூலம், பொதுமக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.