கோவை நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்துள்ளார். அ.தி.மு.க.வின் பிரச்சார வாகனத்தை பா.ஜ.க பிரச்சார வாகனம் ஒன்று உரசி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது . இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.கவினர், தாங்கள் குறித்த நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பா.ஜ.க.வினர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். உடனடியாக அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“