கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, மடிக்கணினி, தொலைக்காட்சி உள்ளிட்டவை வாங்கியுள்ளார். பின்னர் அந்தக் கடன் தவணைகளை முறையாக செலுத்தி முடித்து, தடையில்லா சான்றிதழையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவையில் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு வங்கி கடன் வழங்கியுள்ளது. அப்போது அப்துல் கரீம் கடன் வாங்க விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை நிராகரித்த வங்கி, கடன் வழங்க மறுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்தினரிடம் விசாரித்த போது, பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தில் ஒரு இலட்ச ரூபாய் தனி நபர் கடன் வாங்கியுள்ளதாகவும், அந்த கடனை முறையாக செலுத்தாத காரணத்தினால் கடன் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிபில் ஸ்கோர் குறைந்து இருப்பதால், இனி எந்த நிறுவனத்திலும் கடன் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். அப்துல் கரீம் கடன் வாங்கவோ, அதற்காகவோ விண்ணப்பிக்கவோ செய்யாத நிலையில், எப்படி தன் பெயரில் கடன் வந்தது என அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்திடம் சென்று அவர் விசாரித்த போது, முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஒரு இலட்ச ரூபாய் கடனை செலுத்த கோரி பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் தொல்லை அளித்து வந்துள்ளனர். அப்போது தான் வாங்காத கடனை கட்ட முடியாது என அவர் கூறிய நிலையிலும், அவரது வீட்டிற்கு சென்று கடனை செலுத்துமாறு தொடர்ந்து தொல்லை அளித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்துல் கரீம் வாங்காத கடனை கட்டச் சொல்லி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நிலையில், அபராத தொகையை, அப்துல் கரீமிற்கு வழங்குவதோடு, வழக்கு செலவிற்கு 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனம் அபராத தொகையை உடனடியாக தனக்கு வழங்க வேண்டுமெனவும், இல்லையெனில் நீதிமன்றத்தில் மேல் நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்யப்படும் என அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“