கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பீப்புள் ஆஃப் அண்ணாமலை (People of Annamalai) என்ற இயக்கத்தின் சார்பில் மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது கண்டித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கையில் பதாகைகள் வைத்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உறுப்பினர், மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. அதற்கு காரணம் தேர்தல் அதிகாரிகளும்,மாநகராட்சி அதிகாரிகளும் தான். கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் வாக்கு செலுத்தும்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது.ஆனால் இந்த முறை நீக்கிவிட்டனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு பூத்தில் 830 ஓட்டு காணவில்லை. இதற்கு தேர்தல் அதிகாரிகள் தீர்வு வழங்க வேண்டும். இது போல் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் இல்லை. வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதுபோல தவறு நடக்காமல் தேர்தல் அதிகாரிகள் முறையாக செயல்பட்டு விட்டுப் போன வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனிடையே கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொதுமக்களாக உருவாக்கிய இயக்கம் பீப்புள் ஃபார் அண்ணாமலை (People for annamalai) என்று கூறி அந்த அமைப்பினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோரின் கைகளில் வாக்களித்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டது. பொதுஜனங்கள் உருவாக்கிய அமைப்பு என சொன்னாலும் பா.ஜ.க ஸ்டைலில் "பாரத் மாதா கி ஜே" என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கி , அதே முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க இதை பார்த்து கொண்டு சும்மா இருக்காது என தெரிவித்த அந்த அமைப்பினர், இது பொது மக்களாக உருவாக்கிய அமைப்பு இதற்கும் பா.ஜ.கவிற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தனர். வாக்களித்தற்கான அடையாளத்துடன், வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி பீப்புள் ஃபார் அண்ணாமலை (People for annamalai) அமைப்பினை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“