தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்த சொகுசு கார்..!
கோவை சாய்பாபா காலனி பகுதியில் அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் என்ற இளைஞர் ஓட்டி வந்த சொகுசு கார் ஒன்று, எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராகுல், விஜய், மோகன் ராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய நான்கு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை, ராகுல் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் சொகுசு காரில் சாய்பாபா காலனி பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானதில், கார் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. எனினும், காரில் பயணம் செய்த நான்கு இளைஞர்களும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால், ஏர் பேக் விரிவடைந்து அவர்களைக் காப்பாற்றியது.
ஆனாலும் அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில், விபத்தில் சிக்கிய 4 இளைஞர்களும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சாய்பாபா காலனி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இளைஞர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அதேபோல், கோவை லங்கா கார்னர் பகுதியில் நேற்று நள்ளிரவு லாரி சிக்கியதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளியூரில் இருந்து வந்த லாரி ரயில்வே பாலம் நிர்ணயித்த உயரத்தை விட அதிக உயரத்தில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் லாரி மீது சரிந்த ராட்சத தடுப்பு கம்பத்தை ஒழுங்குபடுத்தினார்.
குஜராத் மாநிலத்தில் இருந்து சீரகம் ஏற்றி வந்த அந்த லாரியை காவல்துறையினர் மீட்ட பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. சாலை போக்குவரத்திற்கு வரும் கனரக வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பதாகைகள் வைத்து கனரக வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வுகளை அதிகாரிகள் கொடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துகள் ஏற்படாது என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் சரக்கு வாகனங்கள் புறவழிச் சாலையைப் பயன்படுத்திச் செல்ல வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், இதுபோன்று நள்ளிரவு நேரங்களில் டீசல் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த லாரிகள் உள்ளே வருவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று கடந்த மாதம் டேங்கர் லாரி ஒன்று மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.