பி.ரஹ்மான் கோவை
கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காரில் இருந்த இரு சிலிண்டர்களில் ஒரு சிலிண்டர் மட்டும் வெடித்துள்ளது எனவும் சம்பவ இடத்தில் பால்ரஸ் குண்டுகள் இல்லை வேறு சில விடயங்கள் இருக்கின்றது அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்து விபத்து குறித்த விசாரணை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சம்பவ இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் புலன் விசாரணை நடைபெற்று வருகின்றது. கமிஷ்னர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கபட்டு விசாரணை நடத்தப்படுகின்றது.
தடய அறிவியல் துறை இயக்குனர் தலைமையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. கோவை வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் காமாண்டோ பிரிவுவின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் இருந்த இரு சிலிண்டரில் ஒரு சிலிண்டர் மட்டுமே வெடித்து இருக்கின்றது
காரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், இறந்து போன நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றோம். சம்பவ இடத்தில் சில தடயங்கள் கைப்பற்றி இருக்கின்றோம். இந்த வாகனம் ஏன் இங்கு வந்துள்ளது , இறந்த நபர் யார் என்பது குறித்தும் அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த விபத்து குறித்து விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் நடத்தி வருகிறோம். சம்பவ இடத்தில் பால்ரஸ் குண்டு இல்லை, வேறு சில விடயங்கள் கிடைத்து இருக்கின்றது, அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“