கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை, கொடிசியா இணைந்து நடந்து 9 வது ஆண்டு கோயம்புத்தூர் புத்தக திருவிழா - 2025 ‘கொடிசியா’ வளாகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடை பெற உள்ளது..இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஒசூர் சாலையில் உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கோயம்புத்தூர் புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் முத்துக்குமார், ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன், கவுரவ செயலாளர் யுவராஜ்,ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, கொடிசியா தொழில் அமைப்பு இணைந்து நடைபெற உள்ள கோயமுத்தூர் புத்தக திருவிழா-2025 வரும் ஜூலை 18-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை பத்து நாட்கள் கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் மூன்று அரங்குகளில் நடைபெற உள்ளது.
புத்தகத் திருவிழாவில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன. புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகளும், எழுத்தாளர்களும், கலைஞர்களும், பிரபல தலைவர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் தினமும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளன. தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா,அசாம்,உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்கள் அதிகம் இருப்பார்கள் என தெரிவித்த ஒருங்கிணைப்பாளர்கள் , பள்ளி,மாணவ, மாணவிகள் பங்கு பெறும் இலக்கிய நிகழ்வுகள், கவியரங்குகள், கதை சொல்லும் நிகழ்வுகள், பேச்சுப்போட்டிகள், சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தினமும் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக மாணவ மாணவிகள் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.