நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் தீபாவளி பண்டிகைகளுக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாநகரில் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி ஆகிய அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க அரசியல் கட்சியினர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில், கோவை ரயில் நிலையம் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் "விடியலின் ஒளி வந்தது! தினம் தினம் திருநாள் தந்தது!" என்ற வாசகங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் புகைப்படங்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதேபோல் திமுக போஸ்டர்களுக்கு அருகிலேயே 2026 கப்பு முக்கியம் பிகிலு என்ற வாசகங்களுடன் விஜய் ரசிகர்களும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள ஒரு போஸ்டரில் "களமும் நமதே! காலமும் நமதே! 2026 கப்பு முக்கியம் பிகிலு என்ற வாசகமும், மற்றொரு போஸ்டரில் "கப் முக்கியம் பிகிலு ஸ்வீட் எடு! தீபாவளி கொண்டாடு" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பட்டாசுகள் வாங்குவது, புத்தாடைகள் வாங்குவது, புது பொருட்கள் வாங்குவது என பரபரப்பாக இருக்கும் நிலையில் பொதுமக்கள் அதிகளவு வரும் இப்பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“