பகல் - இரவு என ஷிப்ட் முறையில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் அச்சத்தில் இருக்கும் சின்னார்பதி மலைவாழ் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தீ மூட்டி யானையை விரட்டி வருகின்றனர்
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சுள்ளி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது. பொள்ளாச்சி அடுத்த நவமலை பகுதியில் பெரும்பாலும் தென்படும் இந்த யானை,பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் பகல் நேரங்களில் உலா வருகிறது. இரவு பொழுதில் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று விடுகிறது.
நவமலை மின்வாரிய குடியிருப்பில் நேற்று இரவு சுற்றி திரிந்த ஒற்றை யானை, நவமலை சாலையில் ஒய்யாரமாக உலா வந்தது. இந்த நிலையில் சின்னார் பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு அருகே முகாமிட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களை யானையிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தீ மூட்டுதல்,ஒலி எழுப்புதல் உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் உள்ள பலா,வாழை போன்றவற்றை தேடி இப்பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால் சுழற்சி முறையில் ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதே போல காட்டு யானையும் பகல் நேரங்களில் சாலைகளிலும் இரவு நேரங்களில் குடியிருப்புகளிலும் ஷிப்ட் முறையில் சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“