கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் வருவாய் கிராமத்தில் பட்டா நிலத்தில் உள்ள வண்டிபாதையை அப்பகுதி விவசாயிகள் நீண்ட ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த வண்டிப்பாதையை நிலவியல் வண்டிப்பாதையாக மாற்றம் செய்து தரக்கோரி தெற்கு வருவாய் கோட்டாச்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த வருவாய் கோட்டாச்சியர் அப்பாதையை நிலவியல் வண்டிப்பாதையாக மாற்ற சாத்தியம் இல்லை என கூறியதால், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டபடவில்லை என தெரிகிறது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், தெற்கு வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து கண்ட முழக்கங்களை எழுப்பி காலவரையற்ற காத்திருப்பு போராட்ட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதி இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“