கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி, ("National Federation of Blind and Coimbatore Spark Round Table 323") உடன் இணைந்து கோவையில் முதல் முறையாக பார்வையற்றோர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை துவக்கி உள்ளது.
Advertisment
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் இதனை துவக்கி வைத்து, பார்வையிட்டார். இதில் தற்போது 20" பார்வையற்ற மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு மூன்று மாத பயிற்சி மற்றும் கணினி பயிற்சி அளிக்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு தங்கும் இடம் உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாத பயிற்சி நிறைவு பெற்ற பின்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள பயிற்சியாளர் சாம்கார்த்திக் என்பவரும் பார்வை திறன் அற்றவர் ஆவார். இவர் கண்டுபிடித்த செயலியின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அச்செயலி மூலம் ஒவ்வொரு கமெண்ட்டும் ஒலியாக தெரிவிக்கப்படுகிறது இதனால் கணினியை கையாளுவது எளிமையாக இருக்கக்கூடும்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இங்கு பார்வையற்றோருக்கு பொதுத்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதல் சிறப்பம்சமாக வேலை வாய்ப்பு பயிற்சி மையமும் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 பேர் இங்கு பயிற்சி பெறும் வகையில் துவங்கப்பட்டுள்ளது, இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்த அவர் வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளில் அவர்களின் திறமைகளை கண்டறிந்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்தத் தன்னார்வ அமைப்புகள் இது போன்ற முன்னெடுப்புகளை முன்னெடுக்கும் பொழுது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒத்துழைப்பு நல்கப்படும் என தெரிவித்தார்
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil