scorecardresearch

கோவையின் டாக் ஆப் தி டவுன் ஷர்மிளா : தந்தையின் கனவு நிறைவேறியதாக பெருமிதம்

நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன்

Coimbatore Sharmila
பெண் கனரக வாகன ஓட்டுநர் ஷர்மிளா

கோவை காந்திபுரம், சோமனூர் ரூட்டின் புதிய தலைவி ஷர்மிளாதான். பேருந்தை சாதுரியமாக  வளைத்து ஓட்டும் ஷர்மிளா ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பேருந்தை கடந்து வருவோரும், போவோரும் ஒரு நிமிடம் நின்று ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுத்தான் நகர்கின்றனர்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்ட ஷர்மிளா ஆட்டோ ஓட்டுநரான தனது தந்தை மகேஷ் தான் தனக்கு ஊக்கம் அளித்தார் எனவும், தனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்த ஷர்மிளா, தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கிறார்.

பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்ட ஷர்மிளா, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் எனவும், டிரைவர் என்றாலே சமூகத்தில் பலரும் முகச் சுழிப்புடன் தான் பார்ப்பார்கள், ஆனால் எனக்கு எந்த வேலையை எல்லோரும் குறைவாக பார்த்தார்களோ அதன் மீதுதான் ஆர்வம் அதிகரித்தது என்கிறார் முகம் மிளிர.

ஏழாவது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டிலும், உனக்கு எதில் விருப்பமோ அதை செய் என கூறிவிட்டாதால் கனவுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இப்போதான் பேருந்தை கையில் எடுத்திருக்கிறேன், ஆனால் 2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்தேன். நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பா தான் முழு காரணம் என ஷர்மிளா கூறுகிறார்.

நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன் என தந்தை கூறினார் என்பதை நிறைவு கூறுகிறார். ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசினாலும் இந்த காக்கி சட்டையை போட்டதுக்குப் பிறகு முடியாததுனு எதுவுமே இல்லைனு காலரை தூக்கிவிட்டு சொல்கிறார்

பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் இறங்கிவிட்டார்  கோவையின் டாக் ஆப் தி டவுன் ஆகியிருக்கும் ஷர்மிளாவின் தந்தையின் கனவு நினைவாய் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu coimbatore first women of heavy vehicle driver sharmila