கோவை சுங்கம் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் / நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி மற்றும் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
Advertisment
அப்போது ஆறு மாத குழந்தையுடன் மேடைக்கு வந்த அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர், கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். இது குறித்து கண்ணன் கூறுகையில், எனது சொந்த ஊர் தேனி எனக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார்.
எனவே எனது இரண்டு பெண் குழந்தைகளையும் எனது தாய் தந்தையார் தான் பார்த்து கொள்கிறார், தனது பெற்றோர்களுக்கும் வயது மூப்பு காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது. எனவே எனக்கு சொந்த ஊருக்கே பணி மாறுதல் வேண்டியும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
Advertisment
Advertisements
இது குறித்து பலமுறை பொது மேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்ததாக கூறினார். மேலும் அமைச்சர், தனது பிரச்சினை குறித்து பேசி தீர்வு காணப்படும் என தெரிவித்ததாகவும் கண்ணன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”