/indian-express-tamil/media/media_files/jVAPfxvtG8GGIAkJmV0j.jpg)
தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சூழல் உள்ளதால், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது.
மழைநீர் தேங்குவதைத் தடுக்க தயார் நடவடிக்கைகள் வழக்கமாக பருவமழை காலங்களில் மாநகரின் சாலையோர தாழ்வான இடங்கள், ரயில்வே சுரங்கப் பாதைகளின் கீழ் புற வழித் தடங்கள், மேம்பால கீழ் வழித் தடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இதைத் தடுக்கும் வகையில், தற்போது மேற்கண்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் தடுக்கவும், தேங்கினாலும் விரைவாக வெளியேற்றவும் கூடுதல் மோட்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன.
கோயம்புத்தூர் மாநகரில் மழை நீர் தேங்கும் பகுதிகளான மேம்பாலங்களின் கீழ் பகுதிகள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
பருவமழை காலத்தையொட்டி, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. மண்டலம் வாரியாக தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி அவசர கட்டுப்பாட்டு மைய எண்-0422-2302323, வாட்ஸ் அப் எண்: 81900-00200, வடக்கு மண்டலம்: 89259-75980, மேற்கு மண்டலம்: 89259-75981, மத்திய மண்டலம்: 89259-75982, தெற்கு மண்டலம்: 90430-66114, கிழக்கு மண்டலம்: 89258-40945 என்ற எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளிலும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன, வால்பாறை: 04253-222394, பொள்ளாச்சி: 04259-220999, மேட்டுப்பாளையம்: 04254-222151, மதுக்கரை: 0422-2511815, கூடலூர்: 0422-2692402, கருமத்தம்பட்டி: 0421-2333070, காரமடை: 04254-272315 ஆகிய எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அவசரகால தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தற்போது லேசான தூறல் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழையின் வேகம் அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் இந்த எண்களைப் பயன்படுத்தி மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.