கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தில் கழுகு மோதியதால் விமானம் நிறுத்தப்பட்ட நிலையில் அதில் பயணித்த 164"பயணிகள் தவித்து வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 22 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் சர்வதேச அளவில் காலை ஏர் அரேபியா, மாலை சிங்கப்பூர் விமானம் என விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7மணிக்கு வழக்கம் போல் ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்க்கு 164 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு கழுகுகள் விமானத்தின் இடது பக்க எஞ்சின் மீது மோதியது.
இதில் ஒரு கழுகு என்ஜின் பிளேடில் அடிபட்டு இறந்தது. இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. இதில் இருந்த பயணிகள் அனைவரையும் இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமானத்தின் சேதங்கள் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 4மணி நேரமாக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதை தொடர்ந்து விமானத்தின் பாகங்கள் கொண்டு வரப்பட்டு பழுதை சரி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தாமதம் ஆகி வருவதால் பயணிகள் சிலர் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையம் சென்று அங்கிருந்து சார்ஜா செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். மேலும் சிலர் விமான பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும் சிலர் இந்த விமானத்திற்காக ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளதாகவும் கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் தகவல் தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான். கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/