Coimbatore, Madurai, Trichy News updates: அரியலூரில் அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ariyalur Police Station

தூத்துக்குடி : ரமலான் பண்டிகை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

  • Mar 29, 2025 21:16 IST

    அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

    அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகே அரசு பேருந்து மோதி செல்வகுமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடந்து சென்ற இளைஞர் மீது பேருந்து மோதிய விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Mar 29, 2025 18:31 IST

    தர்பூசணி பழங்களில், ரசாயனம்: திருப்பூரில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் விற்கப்படும் தர்பூசணி
    பழங்களில், ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்



  • Advertisment
  • Mar 29, 2025 17:10 IST

    பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான முறையில் பயணம்: இளைஞரை தேடும் போலீஸ்

    திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான முறையில் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்த இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.



  • Mar 29, 2025 16:29 IST

    தி.மு.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் - கிருஷ்ணசாமி பேட்டி  

    "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான காலம் கனிந்து வருகிறது. தி.மு.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைய வேண்டும். திமுகவை தோற்கடிக்க வலிமையான கூட்டணி அமைய வேண்டும். மற்ற கட்சிகள் ஈகோவையும், கௌரவத்தையும் விட்டு ஒன்று சேர வேண்டும்.

    தி.மு.க - அ.தி.மு.க மட்டுமே மாறி மாறி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் நிலை மாறி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு" என்று புதுக்கோட்டையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.  



  • Advertisment
    Advertisements
  • Mar 29, 2025 16:27 IST

    எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை – ஓ.பி.எஸ் அணி நிர்வாகி வீடியோவால் பரபரப்பு

    நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் பிஜிலி தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என வீடியோ வெளியிட்டு சில நாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஓபிஎஸ் அணி நிர்வாகி ஒருவரும் அதுபோல் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை மாவட்டம் பேட்டை அருகே குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு (55). ஓபிஎஸ் அணியில் ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கிருஷ்ணவேணி, வங்கி ஊழியர். இந்நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவரை ராஜகுரு தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜகுருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ராஜகுரு, தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனுக்கு வீடியோ மூலம் இணையதளம் வாயிலாக புகார் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகாரில் அவர் கூறுகையில், “எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தற்போது உள்ளது. எனது உயிருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் 3 பேர் தான் காரணம்’’ என தெரிவித்து உள்ளார்.

    இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்தனர். சேரன்மகாதேவி டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையிலான போலீசார் ராஜகுரு உட்பட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.



  • Mar 29, 2025 16:24 IST

    நெல்லையில் மீண்டும் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்

    நெல்லையில் உள்ள மானூர் ஆலங்குளம் சாலையில் காலாவதியான மருந்துகளை கொட்டிச் சென்றவர் யார் என விசாரணை நடந்து வருகிறது.  ஏற்கனவே நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கோடகநல்லூர் கொண்ட நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.

     



  • Mar 29, 2025 16:24 IST

    விழுப்புரத்தில் அடித்துக் கொலை 

     

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏழுமலை (23) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஏழுமலையை இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற அன்பரசன்(18) குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.



  • Mar 29, 2025 16:19 IST

    தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி 

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த சிறுமி உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கிளாடிஸ் (45), 5 வயது சிறுமி வினா பலியாகினர்.



  • Mar 29, 2025 15:51 IST

    துணை முதல்வர் பெயரில் மோசடி - பெண் கைது

     

    சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.  மோசடி செய்த செவ்வாப்பேட்டையைச்  சேர்ந்த வித்யா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்



  • Mar 29, 2025 15:42 IST

    ஆன்லைன் ரம்மி - மனைவி தூக்கிட்டு தற்கொலை

    வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டை கணவர் தொடர்ந்து  விளையாடி வந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



  • Mar 29, 2025 15:07 IST

    உசிலம்பட்டி காவலர் படுகொலை - குற்றவாளி என்கவுன்ட்டர்

    உசிலம்பட்டியில் காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, தேனி கம்பம் பகுதியில் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 



  • Mar 29, 2025 14:08 IST

    முறையாக தண்ணீர் வழங்கவில்லை - ஆட்சியருடன் கொடைக்கானல் மக்கள் வாக்குவாதம் 

    கொடைக்கானலில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முறையாக தண்ணீர் வழங்க வில்லை என கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

     



  • Mar 29, 2025 14:00 IST

    ரம்ஜானை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆடும் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை விலை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர் 



  • Mar 29, 2025 13:32 IST

    திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

    திருச்செந்தூரில்  100 அடிக்கு கடல் உள்வாங்கியது



  • Mar 29, 2025 12:17 IST

    கார் மோதி ஆசிரியர் உயிரிழப்பு

    சேலம் அருகே சாலையோரம் நின்றிருந்த ஆசிரியர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி உயிரிழப்பு



  • Mar 29, 2025 10:58 IST

    மதுரை: சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்

    மதுரை திருமங்கலத்தில் நடந்துசென்ற சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது. நாய் கடித்து குதறுவதைக் கண்ட அங்கிருந்த ஒருவர், நாயை விரட்டி சிறுவனை மீட்டார். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.



  • Mar 29, 2025 10:45 IST

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் வீரா என்ற ஆண் சிங்கம் உடல் மெலிந்த நிலையில் எலும்பு தோலுமாக மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து உயிரிழந்த ஆண் சிங்கம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பூங்கா வளாகத்திலேயே நேற்று இரவு 7.30 மணி அளவில் புதைக்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பூங்காவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.



  • Mar 29, 2025 10:40 IST

    திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியது

    திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடல் திடீரென உள்வாங்கியது. செல்வ தீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாகி காணப்படுகிறது. கடல் உள்வாங்கியதால் வெளியே தெரியும் பாசி பாறைகள் மீது ஆபத்தை உணராமல் பக்தர்கள் நின்று செல்பி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.



  • Mar 29, 2025 10:26 IST

    பிரதமர் வருகை - தீவிர கண்காணிப்பில் ராமேஸ்வரம்

    ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதால் ராமேஸ்வரம் பகுதி தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விழா பந்தல் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏப்.,6ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ராமநவமியான அன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். நேற்று முதல் பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை வீரர்கள் ரோந்து கப்பலில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Mar 29, 2025 10:09 IST

    தென்காசி: வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உச்சிபொத்தை கிராமத்தில் இளங்கோ சக்தி என்பவரது வீட்டில் நள்ளிரவி்ல் புகுந்த மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.



  • Mar 29, 2025 09:55 IST

    திருப்பூர்: தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பாப்பம்பாளையத்தில் தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழந்தன. ராமசாமி என்பவருக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்துள்ளன.



  • Mar 29, 2025 09:52 IST

    தூத்துக்குடி: தீவைத்து எரிக்கப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழப்பு

    கோவில்பட்டி அருகே கீழ்நம்பிபுரத்தில் இளைஞரால் தீவைத்து எரிக்கப்பட்ட 17 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காதல் பிரச்னையில் கடந்த 23-ம் தேதி சம்பவம் நடந்த நிலையில், தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



  • Mar 29, 2025 09:12 IST

    கோவை: ரூ.9 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

    கோவை போத்தனூரில் ரூ.9 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வண்ந்து விற்பனை செய்ய முயன்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Mar 29, 2025 08:53 IST

    திண்டுக்கல்: ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



  • Mar 29, 2025 08:51 IST

    சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் கூட்டம்

    திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று  சனிப்பெயர்ச்சி நடப்பதால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026ல் சனிப்பெயர்ச்சி என்று திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.



Coimbatore Trichy Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: