இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி முதல் தொடங்குகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி ராஜா 100% வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் வகையில், 2 கிராம் தங்கத்தில் பூட்டு சாவியை உருவாக்கி உள்ளார். இரண்டு கிராம் தங்கத்தில் இந்திய வரைபடத்துடன் கூடிய ஒரு பூட்டையும், 100% வாக்கு என்ற சாவியையும் உருவாக்கி உள்ளார். அந்த சாவியில் தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதியை குறிப்பிடும் வகையில் 19 என்ற எண்ணையும், தேர்தல் முத்திரையையும், தேர்தல் மை வைத்த விரலையும் வடிவமைத்துள்ளார்.
ஜனநாயகத்தின் திறவுகோல் நமது வாக்கு என்பதை அடிப்படையாகக் கொண்டு வாக்கு தங்கமாகவும், விரல் மை கருப்பு வைரம் என்பதை குறிக்கும் விதமாகவும், இதனை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக இரண்டு நாட்கள் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“