கோவையில் தனியார் பள்ளியில் பூப்பெய்திய 8-ம் வகுப்பு மாணவி பள்ளிக்குள் சென்று முழு ஆண்டு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக 3 பேர் மீத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி கடந்த ஐந்தாம் தேதி அன்று பூப்பெய்தியுள்ளார். ஆனால், தற்போது முழு ஆண்டு தேர்வு நடப்பதால் தேர்வு எழுத அந்த பள்ளிக்குச் சென்று உள்ளார்.
இந்நிலையில் கடந்த 7 ம் தேதி அறிவியல் தேர்வு 9 ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை நடைபெற்ற போது அந்த மாணவியை தேர்வு மையத்தில் அனுமதிக்காமல் பள்ளி வகுப்பறை முன்பு உள்ள படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்து உள்ளனர். அப்போது மாணவியை பார்ப்பதற்காக அங்கு வந்த அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவர் மாணவி வெளியில் அமர்ந்து தேர்வு எழுதுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை மாணவியின் உறவினர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில்,. மாணவியின் தாய் அங்கு இருந்த ஆசிரியர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த ஆசிரியர், இங்கு அப்படித் தான் நடக்கும், என நீ வேணும்னா..,வேறு பள்ளியில் சேர்த்துக் கொள் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், கல்வித் துறை அதிகாரிகள், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் நிகழ்ந்த தனியார் பள்ளியில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இனிமேல் இதுபோல் மாணவிகளை தனியாக அமர வைக்கக்கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை சுரேந்திரநாத் அளித்த புகாரின் பேரில், பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி என 3 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,