அதிவேகமாகச் சென்ற மோட்டார் பைக் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி அருகில் இருந்த பேக்கரிக்குள் நுழைந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் அறிவொளி நகரைச்சேர்ந்த சேட் என்பவரின் மகன் பர்க் அப்துல்லா(20) தனது மோட்டார் பைக்கில் சிறுமுகை சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்துள்ளார். இதே போல் மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியைச்சேர்ந்த ஷேக் தாவூத் என்பவரது மகன் முகமது அலி (35) தனது மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் சென்றுள்ளார்.
வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியில் திடீரென முகமது அலி சைகையின்றி தனது மோட்டார் சைக்கிளை திருப்பியதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத பர்க் அப்துல்லா மோட்டார் பைக்கை நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து முகமது அலியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அதே வேகத்தில் ரோட்டின் ஓரத்தில் இருந்த பேக்கரியின் உள்ளே புகுந்தது.
இந்த விபத்தில் முகமது அலிக்கு தலையில் பலத்த காயமும், பர்க் அப்துல்லாவிற்கு இடது கால் முட்டிக்கு கீழ் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் முகமது அலி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் பர்க் அப்துல்லாவை கோவை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பர்க் அப்துல்லா ஓட்டிச்சென்ற மோட்டார் பைக் விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த பேக்கரியில் டேபிள்களை இடித்து தள்ளி விட்டு உள்ளே நுழைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் பேக்கரி உள்ளே இருக்கையில் அமர்ந்திருந்த பேக்கரியின் உரிமையாளர் எழுந்து சென்றதால் நூலிழையில் உயிர்த்தப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“