மின்கசிவு ஏற்பட்டும், மின் கம்பி அறுந்து விழுந்தும் அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன. இது போன்ற விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கும், விபத்தில் சிக்கியவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இழப்பீடு வழங்கப்படும்.
இந்த நிலையில், மின்சார விபத்துகளால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பொது இடங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர்களுக்கு மின்வாரியம் சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இதனை ரூ. 10 லட்சமாக உயர்த்தி மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதே போல மின்சார விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் 2 கண்கள் அல்லது கை, கால்களை இழந்திருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தலா ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சார விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்களில் முழு பார்வை பாதிப்பு, 2 கை, கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ரூ.3 லட்சமாகவும், ஒரு கை, கால் செயலிழப்புக்கு நிவாரணம் ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி மின்சார வாரியம் அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில், மின்சார விபத்துகளால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.25,000 நிவாரணத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“