தமிழக காங்கிரஸில் அதிரடி திருப்பமாக தலைவராக பதவி வகித்த திருநாவுக்கரசரை நீக்கி, ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கே எஸ் அழகிரியை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்தார் ராகுல் காந்தி. கோஷ்டி பூசல் தான் திருநாவுக்கரசரின் நீக்கத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், புதிய தலைவரான அழகிரிக்கு, உட்கட்சியில் ஆதரவு உள்ளதாகவே கூறப்படுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க, டெல்லி சென்று ராகுலை சந்தித்தப் பிறகு பேசிய திருநாவுக்கரசரும், 'புதிய தலைமைக்கு வாழ்த்துகள்' என்றார்.
இந்நிலையில், நேற்று(ஜன.5) இரவு தமிழக காங்கிரஸுக்கு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி குழுக்களை அமைத்து ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டார். அதில், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு புதிய பதவி: தமிழக காங்கிரஸுக்கு தேர்தல் குழுக்கள் அமைப்பு
இந்தச் சூழ்நிலையில், புதிய தலைவர் கே எஸ் அழகிரி இன்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதுவும், 'தமிழக அரசு ஒடுக்குமுறையை ஏவுகிறது' என்றும், 'பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது' என்றும் சற்று காரமாகவே தனது அறிக்கையில் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசின் அடித்தளமாக விளங்குபவர்கள். அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிட்டு ஒரு அரசு இயங்க முடியாது. அப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த கே எஸ் அழகிரி, "மரியாதை நிமித்தமாக அழகிரியை சந்தித்ததாகவும், தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் தலைவர்கள் முடிவெடுப்பார்கள்" என்றார்.