தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பார்வையாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முத்தழகன் நிர்வாகிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க மோதிரமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் வருபவர்களுக்கு முறையே 4 கிராம் மற்றும் 2 கிராம் தங்க மோதிரமும் வழங்கப்படும் என அறிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு ‘வீதிதோறும் காங்கிரஸ், வீடுத்தோறும் காங்கிரஸ்’ (ஒவ்வொரு தெருவிலும் காங்கிரஸ், ஒவ்வொரு வீட்டிலும் காங்கிரஸ்) பிரச்சாரத்தை அக்கட்சி வெளியிட்டது. ராகுல் காந்தியை மீண்டும் கட்சியின் தேசியத் தலைவராக ஆக்குவது மற்றும் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நிர்வாகிகள் கடுமையாக உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் மாவட்ட தலைவர் முத்தழகன் கூறுகையில்," முன்பெல்லாம் கட்சி கூட்டங்களை நடத்தும்போது அதிக நபர்களை அழைத்து வர நிறைய முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. தற்போது வாகன வசதி, கூடுதல் பணம் செலவழித்தல் போன்ற எந்த நடவடிக்கையும் இல்லாமல் 500 பேரை அழைத்து வந்துள்ளோம். வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் இது சாத்தியமானது" என்றார்.
மேலும், "காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்ல சரியான குழுவை அமைத்துள்ளோம். ஒவ்வொரு தெருவிலும் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். இந்த பகுதிகளில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதத்தினரை கட்சி செயல்பாடுகளுக்கு பெற முடிந்தாலும் அது எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த கூட்டங்களுக்கு அவர்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்படவில்லை. ஒவ்வொரு வட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு வெகுமதி அளிக்கப்படும்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil