சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட மோதலுக்கு நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தான் காரணம் என்று கூறி அவரை கட்சியில் இருந்து நீங்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இப்போதே தயாராக தொடங்கி விட்டன. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் முன்னலை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கும் கே.பி.கே ஜெயக்குமார் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 8 ஒன்றியத் தலைவர்களை பதவி நீக்கம் செய்து அவருடைய ஆதரவாளர்களை புதிய நிர்வாகிகளாக நியமித்ததாக குற்றம் சாட்டி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் திடீரென முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மேலும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமாரை மாற்றம் செய்ய வேண்டும் என கே.எஸ். அழகிரியிடம் மனு அளிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் முடியும் நிலையில், கே.எஸ். அழகிரி புறப்பட்டுச் சென்ற நிலையில், திடீரென சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின்போது, அருகில் இருந்த பைப் மற்றும் கற்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி அது அடிதடியாக மாறியது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்த திடீர் மோதலில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளான ராபர்ட், ஜோஸ்வா மற்றும் டேனியல் ஆகிய 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனால், அங்கே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதலுக்கு காரணம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் தான் காரணம் என்று கூறி அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்ய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil