அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளி குறித்தும், மறு ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசிய மகா விஷ்ணு யார் என்பது குறித்து நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வரும் நிலையில், ஸ்டாண்ட் அப் காமெடியானாக சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது ஆன்மீக பேச்சாளராக தன்னை மாற்றிக்கொண்டவர் தான் இந்த மகா விஷ்ணு.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பேசிய பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்தும் மனிதர்களின் மறு ஜென்மம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பள்ளியில் இதுபோன்ற ஆன்மீகம் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என்றும் கூறி வருகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல், மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடடை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சு குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும் மகா விஷ்ணுமீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனையடுத்து மகாவிஷ்ணு, மற்றும் அவரின் பரம்பொருள் அறக்கட்டளை தொடர்பான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நி்லையில், மகா விஷ்ணு யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 1994-ம் ஆண்டு மதுரை அலங்காநல்லூரில் பிறந்த இவர், சிறுவயதில், சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். இவரின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் கிடைத்ததை தொடர்ந்து தன்னை ஒரு ஆன்மீக பேச்சாராக மாற்றிக்கொண்டுள்ளார் மகாவிஷ்ணு.
அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி ஆன்மீக தேடலுக்கான வழிகாட்டுவதாக கூறி கட்டண வகுப்புகளை நடத்தியுள்ளார். தான் சித்த மருத்துவம் படித்து வருவதாக கூறி ஒரு வகை லேகியத்தையும் விற்பனை செய்துள்ளார். 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாக கூறப்படும் மகாவிஷ்ணு, நான் செய்த குறும்பு என்ற ஒரு படத்தை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்கு உதவுவதாக கூறி, பள்ளி பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய திருவருட்பாவை சேர்க்க வலியுறுத்தி, அமைச்சர்கள், அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ், மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோரை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை வைத்து தற்போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆன்மீக சொற்பொழிவாளராக மாறிய மகா விஷ்ணு ஸ்ரெஸ் ப்ரி என்ற பெயரில், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், வகுப்புகள் நடத்தி வருகிறார். இதனிடையே பள்ளியில் நான என்ன தவறாக பேசிவிட்டேன். நான் ஓடி ஒளியவில்லை. பள்ளியில் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருவேன் என்று மகா விஷ்ணு தற்போது தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“