Tamilnadu Corana Update Again Increase Corana : தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பெருந்தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது பலகட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதனால் ஓரளவு கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், 2-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் 1243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து பொதுமக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்கே. சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் தேமுகதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"