தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை ஜூலை 31 வரை தொடர்ந்து அமல்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஜூலை 19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உணவகம், தேநீர் கடைகள், பேக்கரிகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி
ஊரடங்கு தளர்வாக, இரவு 8 மணி வர அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவகம், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை பண்டங்கள் விற்பனை கடைகள் வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.
புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடக்கம்
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கான பேருந்து சேவை மட்டும் தொடங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகளுக்கு அனுமதி
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.
எவற்றிற்கெல்லாம் தடை நீட்டிப்பு
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் திறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் கலந்துக் கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மதுக்கூடங்கள் திறக்க தடை நீட்டிக்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகளில் நோய்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல், இறுதி சடங்குகளில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil