தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை வரை படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, வியாழக்கிழமை முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு விகிதம் என்பது, செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு எத்தனை தொற்று உறுதி என்பதாகும்.
கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தபோதிலும், கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்படுவது, வரவிருக்கும் நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்க சாத்தியம் உள்ளதை கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு தினசரி பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 1.42 லட்சமாக இருந்த நிலையில், அது புதன்கிழமை படிப்படியாக 1.55 லட்சமாக அதிகரித்தது. அப்போதிருந்து, கொரோனா பாதிப்பு விகிதம் புதன்கிழமை 1.1% இலிருந்து ஞாயிற்றுக்கிழமை 1.3% ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 1,756 இல் இருந்து ஞாயிற்றுக்கிழமை 1,990 ஆக அதிகரித்துள்ளது.
மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விகித பகுப்பாய்வில் வடக்கு, மேற்கு மற்றும் டெல்டா மண்டலங்களில், கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த மண்டலங்களில் செய்யப்பட்ட சோதனைகளில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு விகிதம்
டெல்டா பகுதி: புதன்கிழமை 1.3% லிருந்து சனிக்கிழமை 1.7% ஆக உயர்வு
மேற்கு மண்டலம்: புதன்கிழமை 1.6% லிருந்து சனிக்கிழமை 1.8% ஆக உயர்வு
வடக்கு மண்டலம்: புதன்கிழமை 1% லிருந்து சனிக்கிழமை 1.1% ஆக உயர்வு
தினசரி தொற்று எண்ணிக்கை
தினசரி தொற்று எண்ணிக்கையைப் பொறுத்தவரை, டெல்டா பகுதியில் புதன்கிழமை 279 தொற்று பாதிப்புகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 369 ஆக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், மேற்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 654 லிருந்து 758 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் வடக்கு மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 651 லிருந்து சனிக்கிழமை 707 ஆக உயர்ந்தது, ஞாயிற்றுக்கிழமை 686 ஆக வீழ்ச்சியடைந்தது.
அதேநேரம் தெற்கு மண்டலத்தில், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பாதிப்புகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை. இதன் மூலம் 1%க்கும் குறைவான கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள ஒரே பகுதி தெற்கு மண்டலம் தான்.
கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகளவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil