முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது: சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் கட்டுப்பாடு

இது தவிர கடலூர், தென்காசி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று  ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் நகராட்சியில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

Corona virus in tamil nadu increased to 1629 cases covid 19 latest tn reports

கொரோனா வைரஸ் பெருந்தோற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வரும் புதன்கிழமை வரை சென்னை, கோவை, மதுரை உட்பட 5 மாநகராட்சிகளில்  முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.

முன்னதாக,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில், கிராமப்புறங்களில்  நோய்த்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும், நகர்ப்புறங்களிலும் குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் நோய்த்தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று விவாதிக்ககப் பட்டது. மேலும், நகர்ப்புறங்களில் பொது முடக்கத்தை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, வைரஸ் நோய் தொற்று பரவலைக் கட்டுபடுத்த முடியும் என்று சுகாதார வல்லுநர்கள் முதல்வரிடம் தெரிவித்தனர்.

எனவே,நகர்ப்புறங்களில்  நோய் தொற்றின் வளர்ச்சி விகிதத்தையும்,    மருத்துவம் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் சில முக்கிய  முடிவுகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும்.

சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும்.

ஐந்து மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களில் இன்று முதல் 29ம் தேதி வரையில் முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர கடலூர், தென்காசி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று  ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் நகராட்சியில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்

திருவள்ளுவர் மாவட்டம்- முழு ஊரடங்கு  அறவிப்பு:  

சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர், பொன்னேரி, நாரவாரிக்குப்பம், திருமழிசை, திருநின்றவூர் பேரூராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 13 கிராமப் பஞ்சாயத்துகளும் புழல் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 7 கிராமப் பஞ்சாயத்துகளும், சோழவரம் ஒன்றியத்தில் சோழவரம், பாடியநல்லூர், நல்லூர், கும்மனூர், ஆங்காடு, விச்சூர், வெள்ளிவாயல், பெருங்காவூர், அலமாதி ஆகிய 9 கிராம பஞ்சாயத்துகளும், மீஞ்சூர் ஒன்றியத்தில் மேலூர், சுப்புரெட்டிப்பாளையம், கொண்டகரை, வள்ளூர், அத்திபட்டு, நாலூர், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் மற்றும் வெள்ளிவாயல்சாவடி ஆகிய 9 கிராமப் பஞ்சாயத்துகளும்,  பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 28 கிராமப் பஞ்சாயத்துகளும்மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டப் பகுதிகள் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகிறது.

திருவள்ளுவர் மாவட்டம் ஊரடங்கு உத்தரவு

மேற்சொன்ன பகுதிகளில், 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை  ஊரடங்கு முழுமையாக அமல் படுத்தப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கு:

சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம் மற்றும் பல்லாவரம் வட்டத்திலுள்ள தாம்பரம் பெரு நகராட்சி, பல்லாவரம் பெரு நகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, மற்றும் பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும்  புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலூர், கவுல்பஜார், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகிய 15 கிராம ஊராட்சிகள்  மற்றும் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கானாத்தூர் ரெட்டிக்குப்பம் மற்றும் முட்டுக்காடு (பகுதி) ஆகிய 2 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகள் முழுவதிலும் பேரிடர் மேலாண்மனை சட்டம், 2005ன் கீழ், முழு ஊரடங்கு அமலாகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரடங்கு உத்தரவு

மேற்சொன்ன பகுதிகளில், 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை  ஊரடங்கு முழுமையாக அமல் படுத்தப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு  : 

சென்னை பெருநகர மாநகராட்சி  பகுதிக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாங்காடு பேரூராட்சி, குன்றத்தூர் பேரூராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.

காஞ்சிபுரம் ஊரடங்கு உத்தரவு

மேற்சொன்ன பகுதிகளில், 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை  ஊரடங்கு முழுமையாக அமல் படுத்தப்படும்.

முழு ஊரடங்கு என்றால் என்ன? 

இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்:

1) மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.

2) அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

3) இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படும் 33 சதவீதப் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

4) அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM Centre) வழக்கம் போல் செயல்படும்.

5) உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

6) முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

7) ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community Kitchens) தொடர்ந்து செயல்படும்.

8) ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

9) கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu coronalockdown complete lockdown districtwise list

Next Story
4 நாள் முழு ஊரடங்க, 4 மாசம்ன்னு தப்பா புரிஞ்சிக் கிட்டாங்களோ?! – புகைப்படத் தொகுப்புChennai Full Lockdown, Coronavirus, Essential things
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express