Tamilnadu AIADMK News Update : அதிமுகவில், அவைத்தலைவர் தேர்ந்தெடுக்க தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்ததார். அதன்பிறகு அதிமுகவில் ஒவ்வொரு நாளும் பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா அடுத்து முதல்வராக பதவியேற்க இருந்தார். இதற்காக ஒ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான அவர் எடப்பாபடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தார். இதனை தொடர்ந்து அப்போது அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு புதிய பதவிகள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மரணமடைந்தார். அதன்பிறகு இதுவரை புதிய அவைத்தலைவர் தேர்தந்துக்காத நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் புதிதாக அவைத்தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,,கட்சி விதிமுறைப்படி உட்கட்சி தேர்தலை நடத்தி பொது செயலாளர் தேர்வு செய்து விட்டு, அவருடன் கூட்டு பொது குழுவிலேயே அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவின் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பரிந்துரையின் மூலமோ அவைத் தலைவரை நியமிக்கவோ, தேர்வு செய்யவோ தடை விதிக்க வேண்டும் என்று கூறிள்ளார்.
இன்று நடைபெற்ற இந்த மனுமீதான விசாரைணையில் மனு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்ட, நீதிபதி இ.தாமோதரன் வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தற்போது தமிழகத்தின் எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக ஜெயலலிதா மரணமடைந்த நாளில் இருந்து பெரும் பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், சமீப காலமாக கட்சியின் இருந்து நீக்கப்பட்ட சசிகலா கட்சியை கைப்பற்ற உள்ளதாக கூறி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, தற்போது அவை தலைவர் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil