100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; பத்திரிகையாளர்களுக்கு கோவிட் சிகிச்சை தனி மையம் தேவை: சென்னை பிரஸ் கிளப்

Covid 19 Tamilnadu : பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்க வேண்டுகிறோம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து பத்திரிக்கையாளர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பாடில்லை. இதில் ஒரு புறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் தொற்று நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது. இந்த அச்சுறுத்தலான காலகட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் கொரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி மக்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்த தீவிர பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களை கொரோனா ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று தலைமைச் செயலருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் எழுதியுள்ள கடித்ததில்,

கொரொனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை  இந்தியாவிலும் ,தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்  பத்திரிகை ஒருங்கிணைப்புக்கு  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திரு.குமரகுருபரன் மற்றும் திரு.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் அமைத்தமைக்கு நன்றி. அதே நேரத்தில் இந்த குழுவினரின் கடமைகள் – செயல்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டுகிறோம்.

கொரொனா நோய்த்தொற்றால் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரை இழந்து வரும் நிலையில் உடனடியாக இந்த குழுவினர் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்கி வரும் நிலையில்  , இரண்டாவது அலையில்  இதுவரை 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சரியான சிகிச்சை கிடைக்காமல் பத்திரிகையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் நாள் தோறும் அல்லல் பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் முக்கியமான சில கோரிக்கைகளை மட்டும் அவசர நெருக்கடி சூழல் கருதி தங்கள் முன் வைக்கிறோம்

1. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறையினர், உள்ளாட்சிப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினரைப் போன்று இரவும் பகலுமாக களத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர்  கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  சிறந்த சிகிச்சை அளித்திட ஆவண செய்ய வேண்டுகிறோம். மேலும்  பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு கோவிட் சிகிச்சை மையம்  ஒன்றை உடனடியாக உருவாக்கித் தர வேண்டுகிறோம்.

2.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காலகட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய  பத்திரிகையாளார்களின் குடும்பங்களுக்கு  உடனடியாக  தமிழக அரசு நிவாரணத் தொகையை – இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டுகிறோம்.

3. பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்க வேண்டுகிறோம்.  சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்திடவும் வேண்டுகிறோம்.

இந்த  முக்கியமான கோரிக்கைகளை காலத்தின் தேவை கருதி நிறைவேற்றித் தரவேண்டும் என்று நம்பிக்கையுடன் வேண்டுகோளாக முன்வைக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covid 19 chennai press club letter to chief secretary for corona for journalists

Next Story
கொரோனா பாதிப்பு: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் மரணம்Tamilnadu news in tamil: Retired police officer John Nicholson died due to covid
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com