Tamilnadu Covid Update : சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது இரண்டு ஆண்டுகளை முழுமையாக கடந்த பின்னும், தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளில் கொரோனா தொற்றின் 4 மற்றும் 5-வது அலை பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றின் உருமாரிய வகையான டெல்டா வைரஸ், கருப்பு பூஞ்சை உள்ளிட்ட சில தொற்றுகள் பரவி வந்தது.
அந்த வகையில் தற்போது கொரோனா தொற்றின் மற்றொரு உருமாறிய வகையான ஒமை்கரான் தொற்று பாதிப்பு தற்போது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனுடன் சேர்ந்து கொரோனா தொற்றின் வேகமும் அதிகரித்து வருவதால் உலகளவில் பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் சமீபத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் கொரோனா தொற்றின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.
தமிழகத்தின் இன்று ஒரே நாளில், 20,911 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 28,68,500-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு இன்று 25 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 36,930 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 6235 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,27,960 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 8218 பேருக்கும், செங்கல்பட்டில்2030 பேருக்கும், கோவையில் 1162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்றுக்கு இன்று 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “