Advertisment

13 மளிகை பொருட்கள், ரூ 2000 ஸ்டாலின் அறிவித்த திட்டம் வீணாகிறதா?

Tamilnadu Covid Relief Fund : தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுளளது.

author-image
WebDesk
New Update
13 மளிகை பொருட்கள், ரூ 2000 ஸ்டாலின் அறிவித்த திட்டம் வீணாகிறதா?

தமிழகத்தில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தமிழக அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையினால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கையை மேலும் குறைக்கும் வகையில் ஒரு சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 14ந் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். இதனால் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா காலத்தில் அவதிப்படும் மக்களுக்கு, ரூ 4000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தில் முதல் தவணையாக ரூ2000 கடந்த மாத இறுதியில் வழங்கப்பட்ட நிலையில், 2-வது தவனை வழங்கும் திட்டம் கடந்த ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தநாளன்று சென்னையிலும், அடுத்த இரு தினங்களில் (ஜூன் 5) தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருநதார். மேலும் இந்த திட்டத்துடன் ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல அவதிப்படும் பொதுமக்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு (சுமார் 2 கோடி குடும்பங்கள்) இந்த பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அவர் அறிவித்த நாட்களில் தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அமலில் இருந்ததால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த இந்த திட்டம் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் முதல்வர் அறிவித்த்து போல எவ்வித நிவாரண பொருட்களும் வழங்கப்படவில்லை.

சென்னையில் ஜூன் 3-ந் தேதியும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஜூன் 5-ந் தேதியும் தொடங்கும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருப்பதாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் நிவாரண பொருட்கள் அடங்கிய கிட் சப்ளை செய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.  இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்கும்போது சென்னையில் இருந்து இன்னும் பொருட்கள் வரவில்லை வந்த உடன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று ஒரு குறிப்பிட்ட தேதியில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு டோக்கன் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் மக்கள் ரேஷன் கடைகளில் சென்று கேட்கும்போது இன்னும் நிவாரண பொருட்கள் வரவில்லை என்று கூறி கொடுத்த டோக்கனை மீண்டும் வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர். தங்களின் தேவைக்காக கொரோனா தொற்றையும் பொருட்படுத்தால் ரேஷன்கடை சென்ற மக்களுக்கும் அதிகாரிகளின் இந்த செயலால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது குறித்து அதிகரிகளிடம் விசாரித்த போது பொருட்கள் மொத்தமாக வரவில்லை கொஞ்சம் கொஞ்சமாக வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் நிவாரணப்பொருட்கள் வருவதற்கு ஜூன் 15-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை ஆகலாம் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது 14-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், 15-ந் தேதிக்கு பிறகுதான் நிவாரண பொருட்கள் வரும் என்று அதிகாரிகள் கூறுவது மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் கிடைத்தால் மட்டுமே அது உதவி என்ற ஒரு கூற்றுக்கு இணைங்க ஊரடங்கு காலத்தில் நிவாரணங்கள் கிடைக்காமல் ஊரடங்கு முடிந்து கிடைத்தால் அது என்ன பயனைகொடுக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதில் நிவாரண பொருட்கள் கூட கொள்முதல் மற்றும் பேக் செய்ய தாமதமாகிவிட்டது என்று காரணம் கூறினாலும், கொரோனா நிதியாக அறிவிக்கப்பட்ட ரூ2000 வழங்கவும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதா என்ற விவாதம் பரவலாக எழுந்துள்ளது.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Tamilnadu Covid Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment