விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் லாரி செட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து சேதமானது.
சிவகாசி - சாத்தூர் சாலையில், சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகே, மேட்டூர் டிரான்ஸ்போர்ட் என்ற லாரி செட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி சீசன் நேரம் என்பதால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்ப வேண்டிய பட்டாசுகள் பெட்டி, பெட்டியாக லாரி செட் குடோனில் இறக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மாலை அந்த குடோனில், ஒரு பட்டாசு ஆலையிலிருந்து வந்த பட்டாசு பெட்டிகளை இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, குடோனின் ஒரு பகுதியிலிருந்த பட்டாசு பெட்டி வெடித்து சிதறியது. இதனைப் பார்த்து லாரி செட் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உடனடியாக லாரி செட்டை விட்டு வெளியேறி தப்பியோடினர்.
சற்று நேரத்தில் குடானில் இறக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசு பெட்டிகளிலும் அடுத்தடுத்து தீ பறவி வெடித்து சிதறியது. ஒரு கட்டத்தில் பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்தன. இதனால் ஏற்பட்ட பயங்கர வெடி சத்தம் சுமார் 5 கிலோ மீட்டர் வரை கேட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் லாரி செட் குடோனில் ஏற்பட்ட தீயை, நேற்றிரவு 11 மணியளவில் முழுவதுமாக அணைத்தனர். இந்த எதிர்பாராத திடீர் தீ விபத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்டாசுகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள், ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. லாரி செட் குடோன் தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“