Tamil nadu News Update : உள்ளாட்சி தேர்தலில், பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் தமிழக பாஜக இளைஞரணி செயலாளர் வினோஜ் பி செல்வம் வெளியிட்ட பதிவு மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பலரும் நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக பாஜகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட வினோஜ் பி செல்வம், கட்சியில் இளைஞர்களை சேர்க்கும் வகையில் தொடர்ந்து கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், வினோத் பி செல்வம், இணையதளம் வழியாக தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதில் முதல்கட்டமாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விடுதலைப்போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்பு கொடி பறக்கவிட்டவர்கள் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி. சுதந்திர போரைக் காட்டிலும் இந்துமதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது! உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து, விடுதலை பெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு! என பதிவிட்டுள்ளார்.
விடுதலைப்போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்பு கொடி பறக்கவிட்டவர்கள் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி.
— Vinoj P Selvam (@VinojBJP) January 27, 2022
சுதந்திர போரைக் காட்டிலும் இந்துமதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது!
உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து, விடுதலை பெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு! pic.twitter.com/vl3KsM1H2h
இந்த பதிவில், தமிழகத்தில் 130-இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஒரு ஜேசிபி இந்து கோவிலை இடித்துக்கொண்டிருக்கிறது. இதை தூரத்தில் நிற்கும் மற்றொரு ஜேசிபி அருகில் ஒருவர் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்து வருகிறார். இந்த பதிவு ட்விட்டர் கப்பத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பாஜகவினர் பலரும் இந்த பதிவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகினறனர்.
ஆனால் இந்த ட்விட்டர் பதிவு இந்து கோவில்களை இடிப்பதபோல் பொய்யான தகவல்களை பரப்பும் விதமாக உள்ளது என்றும், இது போன்ற தகவல்களை பரப்பி மக்களிடையே மத கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக வினோஜ் பி செல்வம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்ட அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், வினோஜ் பி செல்வம் மீது, கலகம் செய்ய தூண்டுதல், பொது அமைதி அல்லது அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டிவிடுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்தி வருகினறனர். மேலும், மதத்தின் அடிப்படையிலல் பகையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “