ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983இன் கீழ் கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டும் (2025) விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என கடலூர் மாவட்ட மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலில், மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 61 நாட்கள், மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு இத்தடையை வகுத்துள்ளது.
இந்த ஆணையின்படி மேற்குறிப்பிட்டுள்ள 61 நாட்கள் முடியும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள், விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம். மேற்குறிப்பிட்ட காலங்களில் விசைப்படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்களின் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983இன் கீழ் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்தெரிவித்துள்ளார்.