கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கடலூர் - ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 6ம் வகுப்பு படிக்கும் நிமலஷ் (வயது 10) என்ற மாணவனும் 11ம் வகுப்பு மாணவி சாருமதி (வயது 15) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
ரயில் விபத்து சம்பவ இடத்தை, விழுப்புரம் சரக துணை தலைவர் இ.எஸ். உமா IPS நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவருடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இருக்கிறார். மேலும், ரயில் விபத்து நடத்த இடத்திற்கு அதிவிரைவு படை வீரர்களுடன் விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவ சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தும், தொடர்ந்து பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு எனும் தகவல் அறிந்து மனம் வேதனை அடைகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் துயரத்தில் பள்ளிக் கல்வித்துறை பங்கு எடுத்துக்கொள்கிறது. காயமடைந்த மாணவர்கள் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்ய காத்திருக்கிறோம். உயிரிழந்த பிஞ்சுகளின் பெற்றோர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், சக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/train-accd-2025-07-08-14-15-53.jpg)
இந்த விபத்தில் படுகாயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட செழியன் என்ற மாணவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சாருலதாவின் தம்பி. தனது ஒரே மகளை இழந்துவிட்ட நிலையில் மகன் செழியனையாவது எப்படியாவது காப்பாற்றுங்கள் என மருத்துவர்களிடம் செழியனின் தந்தை திராவிடமணி காலில் விழுந்து கெஞ்சிய காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. கடலூர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய மாணவர் செழியனுக்கு இடதுபுற தொடையில் 10 தையல்கள் போடப்பட்டன. வலது புற தொடையில் மாவுக்கட்டு போடப்பட்டது. இடுப்பில் பெல்ட்டும் வைக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செழியன் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாருமதி, செழியன் இருவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தனர். முன்னதாக கடலூர் அரசு மருத்துவனைக்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ. ஐயப்பன், மருத்துவர்களிடம் தேவையான மருந்துகள் உள்ளனவா என கேட்டார். அப்படி மருந்துகள் தேவை எனில் உடனே ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அப்போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவர் செழியனின் உடைகளை செவிலியர்கள் கழற்றிய எம்எல்ஏ ஐயப்பன் உதவி செய்தார்.
இந்த கோர விபத்துக்கு ரயில்வே கேட் கீப்பரான பங்கஜ் சர்மாதான் காரணம் என சிலர் அவரைத் தாக்கினர். பங்கஜ் சர்மா மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். பயணிகள் ரயில் வருவதை கவனிக்காமல் கேட் கீப்பர் தூங்கிவிட்டார் என சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் ரயில்வே ஊழியர்களோ இதனை திட்டவட்டமாக மறுக்கின்றனர். கேட் கீப்பர் தூங்கி இருந்தாலும் ரெட் சிக்னல்தானே இருந்திருக்கும்; ரெட் சிக்னலை மீறி பயணிகள் ரயில் இயக்கப்பட்டதா? கேட் கீப்பரிடம் இருந்து சிக்னல் வராத நிலையில் எப்படி பயணிகள் ரயில் இயக்கப்பட்டது?
கேட்டை பங்கஜ் சர்மா மூடும் போது ஏதேனும் டெக்னிக்கல் பழுது ஏற்பட்டிருக்க வேண்டும்.. அதனால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும் என்கின்றனர். ரயில்வே அதிகாரிகள் கடலூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல ரயில்வே நிர்வாகமும் தலா ரூ5 லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.