சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் நீர் நிலைகளில் பிரதானமானது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி நீர் மூலம் காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.
சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் உள்ள வீராணம் ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. நேற்று ஏரி, தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. தற்போது, கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு விநாடிக்கு 65 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்காக பாசன வாய்க்கால்களில் விநாடிக்கு 330 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரி நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏரியின் நீர் மட்டம் அவ்வபோது முழுமையடைவதால், ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் போதுமான சீரான நிலையில் இருந்து வருகிறது. ஏரியின் கரையை சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/